’90 கிட்ஸ்’களின் பேவரைட் பஸ்.. சென்னைக்கு மீண்டும் வருது.. எம்.டி.சியின் சூப்பர் பிளான்
சென்னை: சென்னையில் கடந்த 2007 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த டபுள் டக்கர் பேருந்துகள், மீண்டும் சாலைகளில் வலம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இந்த பேருந்துகள் இயக்கப்பட்டால் சென்னையின் அழகை ரசித்தபடி பயணிகள் மீண்டும் பயணிக்க முடியும் என்பதால் பயணிகளுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வேறு எந்த நகரங்களிலும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை சிட்டிக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக ஏசி, தாழ்தள பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

டபுள் டக்கர் பஸ்
எனினும், சென்னையில் கடந்த 2007 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த இரட்டை மாடி (டபுள் டக்கர்) பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா? என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில், 90-களில் சென்னையில் வசித்தவர்கள் மற்றும் சென்னை வந்த சுற்றுலாப் பயணிகள் மாடி பஸ்சில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டு எங்குமே போகாமல் சும்மா ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்னை நகரின் அழகை ரசித்தபடி செல்வார்கள்.
சென்னையில் 1997-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் சென்னையில் 'டபுள் டக்கர்' பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மொத்தம் இந்த பேருந்துகள் 18-ஏ என்ற ரூட்டில் பிராட்வேயில் இருந்து அண்ணாசாலை, ஜி.எஸ்.டி. சாலை வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டன. வழக்கமான பேருந்துகளை விட உயரம் என்பது மட்டுமின்றி கூடுதல் பயணிகள் இருப்பார்கள் என்பதால் இந்த பேருந்துகள் அதிகபட்சம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டன.
தமிழக அரசுக்கு பரிந்துரை
சென்னை பயணிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த பேருந்துகள் மேம்பாலம் கட்டும் பணி போன்ற பல்வேறு பணிகள் காரணமாக 2007-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பழைய படங்களில் கூட இந்த பேருந்துகளை பார்த்த தற்போதுள்ள தலைமுறையினர் மீண்டும் சென்னையில் இயக்கப்படுமா? என எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் தான், சென்னையில் 'டபுள் டக்கர்' பேருந்து மீண்டும் வலம் வரப்போகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான முயற்சிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மின்சாரத்தால் இயங்கும் 20 'டபுள் டக்கர்' பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, சென்னையில் 'டபுள் டக்கர்' பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும். மாதிரி பேருந்தை ஒன்று இயக்கி எந்தெந்த ரூட்களில் இயக்கலாம் என்பதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
எப்போது இயக்கப்படும்?
ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், சென்னையில் மெட்ரோ பணிகள் இல்லாத இடங்கள், நடைமேம்பாலங்கள், மரங்கள் போன்ற இடையூறு இல்லாத ரூட்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் எனத்தெரிகிறது. 90 கிட்ஸ்களின் பேவரைட் பேருந்துகளாக இருந்த இந்த பஸ்கள் மீண்டும் சென்னையில் வலம் வரலாம் என வெளியாகியிருக்கும் தகவல் பேருந்து பயணிகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications