மயிலாப்பூர்.. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. வரலாறு உருவாகுது.. சென்னை மெட்ரோவின் இதயமே இதுதான்!
சென்னை: சென்னையில் மிக மிக சவலான மெட்ரோ ரயில் பாதையாக மயிலாப்பூர், தியாகராய நகர் இருக்கும் என்றும் இந்த பாதை கட்டுமானங்கள் முடிந்து ரயில் ஓடுவதற்கு 2028-ம் ஆண்டு ஆகிவிடும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சரி மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஏன் மைலாப்பூர் ரயில் நிலையத்தையும், தியாகராய நகர் ரயில் நிலையத்தையும் அப்படி சொன்னார்கள் என்பதற்கு காரணம் என்ன என்பதை இபபோது பார்ப்போம்,.

சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 119 இடங்களில் நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில், மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
இப்பகுதியில் சுரங்கப்பாதை, உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரயில்நிலையங்கள் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் டேக் வைர்சன் தான் இருக்கிறது. கடுமையாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் ரயில்கள் ஓடும் போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். அதேநேரம் மக்கள் சொந்த வாகனங்களை பார்க்கிங்கில் போட்டுவிட்டு மெட்ரோவில் பயணிக்கும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படியான சூழல் வருவதற்கு நிச்சயம் 2028 ம் ஆண்டு ஆகிவிடும். அதாவது இன்னும் 5 ஆண்டுகள் வரை அதற்கு சென்னை மக்கள் காத்திருக்க வேண்டும்.,
ஏன் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்றால், இரண்டு ரயில் நிலையங்களை சொல்லலாம். ஒன்று மயிலாப்பூர். இன்னொன்று தியாகராய நகர். இரண்டுமே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையின் மையப்பகுதிகள்.மிக மிக முக்கியமான பகுதிகள்.
இதில் மயிலாப்பூரில் உள்ள திருமயிலை மெட்ரோ ரயில்நிலையம் 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை இணைக்கும் ஒரு முக்கியமான பாதையாக உள்ளது. இதேபோல் வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழியாக செல்லும் ரயில்களும் திருமயிலையை கடந்துதான் செல்ல போகிறது.
எனவே மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ரயில்கள் சந்திப்பு அதாவது ஜங்சன் ஆக இருக்க போகிறது. ஏனெனில் ஏற்கனவே இங்கு பறக்கும் ரயிலும் இருக்கிறது. அந்த பகுதியில் தான் அனைத்து ரயில் நிலையங்களும் அமைய வேண்டி உள்ளது. சரி இதுபற்றி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.." மயிலாப்பூரில் கட்டப்பட உள்ள 'திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம்' லஸ் சந்திப்பில் 35 மீட்டர் ஆழத்தில், 'டி' வடிவில் கட்டப்படும் ரயில் நிலையம் 3 நிலைகளில் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட 4 சுரங்கங்களுடன் கட்டப்பட உள்ளது. சென்னை மாநகரில் முதல் கட்டத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்நிலையங்கள் மற்றும் 2-ம் கட்டத்தில் கட்டப்பட உள்ள ரயில்நிலையங்களிலேயே இது மிகவும் ஆழமானதாகும்.
முதல் கட்டத்தில் அதிகபட்சமாக சென்டிரல் மெட்ரோ ரயில்நிலையம் 30 மீட்டர் ஆழத்தில் 2 அடுக்குகளாக கட்டப்பட்டு உள்ளது. லஸ் சந்திப்பில் பாறை, மண்ணை வெட்டிக் கட்ட வேண்டியிருப்பதால் இந்த ரயில்நிலையம் அமைப்பது என்பது ஒரு என்ஜினிரியரிங் சவாலாக இருக்கும். இந்த ரயில்நிலையம் லஸ் சந்திப்பின் கீழ் 4 ஆயிரத்து 854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது.
இது ஒருபுறம் எனில், மயிலாப்பூர்- பரந்தூருக்கு மெட்ரோ ரயில்நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில், சந்திப்பு முழுவதும் 5 நுழைவு வாயில்களை அமைக்க வேண்டி உள்ளது. இந்த ரயில்நிலையத்தில் இருந்து கடற்கரை - வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்(எம்.ஆர்.டி.எஸ்.) நிலையத்தையும் இணைக்கும் வகையில் மல்டிமாடல் மையமும் அமைக்க போகிறோம். இந்த பாதை வழியாக லஸ் பஸ் நிறுத்தம் மற்றும் கபாலீசுவரர் கோவிலை எளிதாக அடைய முடியும்" என்றார்கள்.
இது ஒருபுறம் எனில் தியாகராய நகர் வழித்தடமும் ரயில் நிலையமும் அமைப்பது சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் மக்கள் நெருக்கம் காரணமாக அந்த பகுதியிலும் மெட்ரோ அதிகாரிகள் சவாலை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
எனவே வழித்தடம் 3-ல் உள்ள ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில்நிலையம் முதல் திருமயிலை மெட்ரோ மற்றும் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ முதல் திருமயிலை மெட்ரோ, வழித்தடம் 4-ல் உள்ள தியாகராயநகர், பனகல் பூங்கா மெட்ரோ முதல் திருமயிலை மெட்ரோ வரை உள்ள பாதைகள் வருகிற 2028-ம் ஆண்டில் தான் நிறைவடைய வாய்ப்பு உள்ளதாம்.
வழித்தடம் 3-ல் மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் இணையும் என்பதால், இனி புரசைவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர், சிறுசேரி மார்க்கமாக உள்ள பாதையில் உள்ள ரயில்நிலையங்களுக்கு மயிலாப்பூரில் இருந்து நேரடி செல்ல முடியும். அதேபோல் மயிலாப்பூரில் இருந்து சென்னையில் எங்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications