வளசரவாக்கம் போலீஸ் நிலையம் அருகே அதிகரிக்கும் பதற்றம்! சீமான் வருகைக்கு முன்பே திரண்ட தொண்டர்கள்!
சென்னை: நடிகை பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்னும் சற்று நேரத்தில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உள்ளார். இதற்கிடையே போலீஸ் நிலையம் முன்பு அதிகளவில் நாதக தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். நேரம் செல்ல செல்ல நாதக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல சினிமா நடிகை ஒருவர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். தன்னை கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

நடிகை பாலியல் புகார்
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், விசாரணைக்குத் தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது பாலியல் பலாத்கார புகார் என்பதால் சம்பந்தப்பட்ட நடிகை புகாரை வாபஸ் பெற்றாலும் விசாரணை நடத்த போலீசாருக்கு அதிகாரம் இருப்பதாகச் சென்னை ஐகோர்ட் கூறியது. மேலும், 12 வாரங்களில் வழக்கு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், பலரிடம் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட நடிகையிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று சீமான் வீட்டிற்கு போலீசார் சம்மன் அனுப்பினர். வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்ட நிலையில், அது கிழிக்கப்பட்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாகச் சீமான் காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு ஆஜராகும் சீமான்
இந்தச் சூழலில் தான் சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். இன்று இரவு 8 மணியளவில் சீமான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இன்று மாலை முதலே வளசரவாக்கம் போலீஸ் நிலையம் அருகே நாம் தமிழர் தொண்டர்கள் குவிந்து வந்தனர். இதனால் போலீசார் பாதுகாப்பும் அங்கு அதிகரிக்கப்பட்டது.
திடீர் மறியல்
இதற்கிடையே வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென மறியல் செய்தனர். நடிகை பாலியல் புகாரில் சீமான் ஆஜராகவுள்ள நிலையில், நாதகவினர் மறியல் செய்தனர். வளசரவாக்கம் பிரதான ஆற்காடு சாலையில் நாதக தொண்டர்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் பெண் தொண்டர்கள் சிலர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.
அதிகரிக்கும் பதற்றம்
நேரம் செல்ல செல்ல அங்கு நாம் தமிழர் கட்சியினர் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமான் இப்போது வடபழனி அருகே காரில் காத்திருக்கிறார். அவர் தனது மனைவி கயல்விழி வருகைக்காகக் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிறகு இருவரும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உள்ளதாகவும் தெரிகிறது. இந்த விசாரணையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் சீமானிடம் கேட்கவுள்ளதாகவும் விசாரணை 3 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என்றும் தெரிகிறது.
நேரம் செல்ல செல்ல நாதக தொண்டர்கள் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே நாதக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அங்கு போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications