சீண்டிய சிறுத்தைகள்..திருமாவளவன் பிறந்த நாள் கவியரங்கத்துக்கு பதிலடியாக சீமான் பிறந்த நாள் கவிதைகள்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் வழக்கறிஞர் சினேகா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து கவிதை வாசித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த கவிதைக்குப் போட்டியாக "சீமான் பிறந்தநாள் நவம்பர் 8 ஆம் தேதி வருகிறது. நாமும் கவிதைப்போட்டி நடத்திடலாம்.அவதூறுக்கு அவதூறு பதில் ஆகாது.அதை உறவுகள் நினைவில் வைத்து ஆக்கப்பூர்வமாகவும் கருத்தியல் தெளிவுடனும் சிறந்த கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது.
திருமாவளவன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது திருமாவளவன் பிறந்த நாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாள் விழாவாக நடத்துவது வழக்கம். திருமாவளவன் பொன்விழாவில் கவிஞர் வாலி தலைமை தாங்கி கவியரங்கத்தை சிறப்பாக நடத்தினார். மணி விழாவை கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார்.கவிஞர்கள் என்ன கவிதை படிக்கப்போகிறார்கள்? எந்த கருத்தோடு படிக்கப்போகிறார்கள்?என யாருக்குமே தெரியாது. அது கவிஞர்களது கருத்துரிமை.

அப்படித்தான் ஒவ்வொரு கவியரங்கத்திலும் கவிஞர்கள் சுதந்திரமாக கவிதை படிக்கிறார்கள். இப்படி படிக்கக்கூடாது; அப்படி படிக்கக்கூடாது என கவிதைக்குள் தலையிடுவது அநாகரீகம் . கடந்த ஆண்டு
மக்கள் கவி கபிலன், தலைமை தாங்கி கவிதை படிக்கும் போது,
செருப்பை
சிம்மாசனத்தில் வைத்து அரசியல் நடத்துவது ராமாயாணம்!
செருப்பை காட்டி
கட்சி நடத்துவது
சீமாயாணம்!
என படித்தார்.
சமகால அரசியலை அவரவர் அரசியல் வழி நின்று கவிதையில் பகடி செய்வது கவிஞர்களின் திறமை.
அப்படித்தான் கடந்த 16.8.2024 அன்று காமராஜர் அரங்கில் பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடை பெற்றது. கவியரங்கத்தில் வழக்கறிஞர் சினேகா, கவிதை படிக்கும் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்துவரும் அருவருப்பு அரசியல் குறித்தும் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் சாதி அரசியல் குறித்தும் விமர்சித்தார்.

இதோ அந்த கவிதை...
செங்கோல் பிடித்து
ஆண்ட பரம்பரை என அடித்தொண்டையில் கத்துவார் !
மறுபக்கம்
உள் ஒதுக்கீடு வேண்டும்
என அரசின்
கால் பிடித்து சுற்றுவார்!
கொள்கை ஏதுமில்லா
சாதி வெறி பிடித்த கிறுக்கு!
அரசியல் அதிகாரம் ஒன்றே அதன் இலக்கு!
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும்!
பச்சோந்தியே
இவர்களைப் பார்த்தால் நாணும்!
அழுகிய பழம்
எரிந்து பானை உடையுமா? ஆளப் பிறந்தவர்
எங்கள் திருமா!
இன்னொருவர் இருக்கிறார் தமிழகத்தின் நவீன கோமாளி!
இவர் மேடைச் சிரிப்பை கேட்கும் தம்பி எல்லாம் ஏமாளி!
இந்த நூற்றாண்டின்
மகத்தான போராளி,
பிரபாகரனை
ஆமை சமைப்பவராய்
அவமதிக்கும் இவரு!
தமிழகத்தில்
ஆர்எஸ்எஸின் பிசிறு!
ஒருநாள்
பெரியாரின் பேரன் என்பார்!
மறுநாள் என் முப்பாட்டன் முருகன் என்பார்! திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே என்பார்!
அயலகத் தமிழரிடம்
திறள் நிதி வாங்கி தின்பார்!
இவர் திராவிடத்தை அளிக்க ஆரியம் அனுப்பிய விஷ குப்பி!
தமிழகமே நாளை மிரட்டும் முகத்தில் காரி துப்பி!
இந்த கவிதையில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக வழக்கறிஞர் சினேகா மீது ஆபாச தாக்குதல்கள் ஒரு பக்கம்- திருமாவளவன் மீதும் நாகரீகமற்ற தாக்குதலை தம்பிமார்கள் தொடுக்கின்றனர். கவிஞர்களின் விமர்சனங்கள் குறித்து பதில் சொல்லாமல் மார்கழி மாதத்து தெருநாய்களை போல பிறாண்டுகிறார்கள். என்ன செய்வது
தலைவர் சீமான் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி! இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை தலைவர் சுனந்தா தாமரைச்செல்வன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சீமான் பிறந்தநாள் நவம்பர் 8 ஆம் தேதி வருகிறது. நாமும் கவிதைப்போட்டி நடத்திடலாம். அவதூறுக்கு அவதூறு பதில் ஆகாது.
அதை உறவுகள் நினைவில் வைத்து ஆக்கப்பூர்வமாகவும் கருத்தியல் தெளிவுடனும் சிறந்த கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications