நாட்படு தேறல்... உலகத் தமிழர்களுக்காக புதிய தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து
சென்னை: உலகத் தமிழர்களுக்காக புதிய தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ளார்.
100 பாடல்கள்... 100 பாடகர்கள்.. 100 இசையமைப்பாளர்கள்.. 100 இயக்குநர்கள் என்ற திட்டத்துடன் நாட்படு தேறல் எனும் பாடல் தொகுப்பை உருவாக்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. இதில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
நாட்படு தேறலுக்காக உலகத் தமிழர்கள் நிலம் கடந்து பாடும் பொதுவான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒரு பாடல் புனைந்திருக்கிறேன். உலகத் தமிழர்களுக்கு இது என் காணிக்கை...
*
எழுத்தும் நீயே
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பொற்றமிழ்த் தாயே
அகமும் நீயே
புறமும் நீயே
முகமும் நீயே
முத்தமிழ்த் தாயே
நாட்படு தேறல்
— வைரமுத்து (@Vairamuthu) March 10, 2021
தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து...
*
எழுத்தும் நீயே சொல்லும் நீயே
பொருளும் நீயே பொற்றமிழ்த் தாயே
அகமும் நீயே புறமும் நீயே
முகமும் நீயே முத்தமிழ்த் தாயே
உனக்கு வணக்கம் தாயே – எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!https://t.co/sya6xEzIqb
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்
ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்
உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த
உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்
ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்
அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்
நிலவும் கதிரும் நிலவும் வரையில்
நீயே தமிழே எங்கள் முதல்தாய்
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
காலக் கடலில் கரைந்த நாட்களை
ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய்
காதல் வீரம் ஞானம் மானம்
கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்
அகிலத்துக்கே தமிழர் சேதி
அறமே அறமே என்று திளைத்தாய்
எத்துணை தலைமுறை மாறிய போதும்
எம்துணை யாக என்றும் நிலைத்தாய்
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications