’நீ அந்த சாதியா’அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான விசாரணை தீவிரம்! வசமாய் சிக்கும் ’தாட்கோ’ அதிகாரி யார்?
சென்னை : பட்டியலின அதிகாரியை சாதியை சொல்லி மிரட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. ஆனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரனை அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் ஆய்வுப் பணியின் போது ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்தது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாதி ரீதியாக திட்டினாரா?
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அவர் வகித்து வந்த துறை அமைச்சர் சிவசங்கரனுக்கு மாற்றப்பட்டது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பட்டியலின ஆணையம், மற்றும் தேசிய பட்டியலின ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

அருண் ஹால்தர்
கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. அதாவது அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் கூறியுள்ளார். சென்னையில் இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர், "தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவுள்ள ராஜகண்ணப்பன், அரசு அதிகாரியை சாதியின் பெயரை சொல்லி திட்டியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை அளிக்க தடயவியல் அறிவியல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்
இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சார்ந்தவர் என தமிழ்நாடு தாட்கோ இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உறுதி செய்யப்படும். விசாரணையில் அமைச்சர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற தகவல் பொய்யென தெரிய வந்தால் தாட்கோ இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. ஆனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications