நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை விவகாரம்.. "விதிமீறல் நடந்ததா?” நாளை அறிக்கை..அமைச்சர் மா.சு அறிவிப்பு!
சென்னை : நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சைகள், புகார்கள் எழுந்தன.
வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் நாளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத்தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தை
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக சமீபத்தில் அறிவித்தார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தை கடந்த 9-ஆம் தேதி இருவரும் வெளியிட்டிருந்தனர். வாடகைத்தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றது தெரியவந்தது. அதேசமயம் விதிமுறைகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது.

விதிகளை மீறியதாக சர்ச்சை
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மகப்பேறின்மை பிரச்சனை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ, அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். அந்த விதிகளை நயன்தாரா தம்பதியர் மீறியதாக புகார் எழுந்தது.

விசாரிக்க கமிட்டி
இதனையடுத்து வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைத்தார்.

இன்று விசாரணை
இந்நிலையில் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகள் பெற்றது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் பெறப்பட உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவமனை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

நாளை மாலை அறிக்கை
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில், விசாரணைக்குழுவின் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications