29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாமக மற்றும் பிற சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும்? என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பாஜக 60 தொகுதிகள் வரை கோரிய நிலையில் அதனை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளதாகவும், இழுபறிக்கு பிறகு பாஜக இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்கப்படும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளை உறுதி செய்துவிட்டன. ஆனால் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. திமுக தனது கூட்டணி கட்சிகளை அழைத்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேசவில்லை. இருப்பினும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தனித்தனியே திரைமறைவில் தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகின்றனர்.
60 தொகுதி கேட்ட பாஜக
பாஜக சார்பில் தமிழகத்தில் 60 சட்டசபை தொகுதிகள் வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில் இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்வைத்தார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. 60 தொகுதிகள் எல்லாம் தர முடியாது என்று கறார் காட்டினார்.
கறார் காட்டிய எடப்பாடி
இதையடுத்து பாஜக தனது டிமாண்ட்டை 30 ஆக குறைத்தது. அதனையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. அதில் ஒன்றை குறைத்து 29 தொகுதிகளை தருகிறோம். குறிப்பாக பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பாஜக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு 29 தொகுதிகள்
இந்நிலையில் தான் தற்போது அதிமுகவில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக சார்பில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை விட கூடுதல் சீட் வேண்டும் என்று கூறப்பட்டதால் 29 வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுவதால் அதைவிட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிடிவிக்கு 9 தொகுதிகள்
அதேபோல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 9 இடங்களும், அன்புமணி ராமதாஸின் பாமகவிற்கு 18 தொகதிகளுக்கு ஒதுக்கப்பட சான்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர பிற சிறிய கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் 170 தொகுதிகள் வரை போட்டியிட முடிவு செய்துள்ளது. அமமுக சார்பில் மொத்தம் 13 தொகுதிகள் பாஜக வழியாக அதிமுகவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அதனையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. 9 தொகுதகிள் ஒதுக்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.
மார்ச் 14ல் பேச்சுவார்த்தை
இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''அதிமுகவும், பாஜகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் மார்ச் 11 திருச்சியின் என்டிஏ பொதுக்கூட்டத்தில் வந்து பேசுகிறார். அதன்பிறகு மார்ச் 14ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications