108 ஆம்புலன்ஸ் சேவை.. கிராமப் புறங்களில் விரைவுபடுத்த வேண்டும்.. தமிழக அரசுக்கு அன்புமணி பாராட்டு!
சென்னை: சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பாமக தலைவைர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் சேவை அவசர காலத்திற்கு உதவும் மருத்துவ சேவை. இது பல லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன்
அண்மையில் வெளியான தகவலின் அடிப்படையில், அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் இதுவரை 8.66 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூா் மாவட்டத்தில் 6.89 லட்சம் போ் பயனடைந்துள்ளனர்.

அன்புமணி ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது.

தமிழக அரசுக்கு பாராட்டு
நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத்தான் எனது பதவிக்காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்கப்பட்டிருப்பதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

கிராமப் புறங்களில் கவனம் தேவை
நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம். கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக உள்ளது. சராசரியாக 15 நிமிடங்கள் வரை ஆகிறது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும்.

ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
கிராமப் பகுதிகளில் அவசர ஆம்புலன்ஸ் ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். அதற்காக அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications