இன்றுமுதல் புதிய மின்கட்டண உயர்வு அமல்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.. யூனிட்-க்கு எவ்வளவு?
சென்னை: தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்ததும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியதாகவும் காரணம் கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக அரசு தரப்பில் மனு சமர்பிக்கப்பட்டது. பின்னர் மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது.

இன்று முதல் அமல்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் 2026 - 27 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம் தொடரும்
புதிதாக அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வில், மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல் விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் தொடரப்பட உள்ளது.

100 யூனிட்டுக்கு எவ்வளவு?
தமிழகத்தில் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாதம் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.72.50 உயர்ந்துள்ளது. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 உயர்ந்துள்ளது.. அதேபோல் மொத்தமாக 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு எவ்வளவு?
இதேபோல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155ம், 700 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275ம், 800 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு.395ம், 900 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565ம் உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications