சுதீஷின் மனைவியை ஏமாற்றியவர் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்
சென்னை: விஜயகாந்த் மைத்துனர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் ரூ.43 கோடி மோசடி செய்த கட்டுமான உரிமையாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் மேலாளர் சாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக துணை பொதுச்செயலாளருமான சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் ரூ.43 கோடி மோசடி செய்த புகாரில் இருவரும் கைதாகி உள்ளனர். இவர்களை பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

முன்னதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி என்ன புகார் அளித்தார் என்பதையும், அது எப்படிப்பட்ட மோசடி என்பதையும் பார்ப்போம்.
மறைந்த தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தேமுதிகவில் துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி பூர்ண ஜோதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அண்மையில் நேரில் வந்தார். அங்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் பூர்ண ஜோதி கூறுகையில். " சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் எனக்கும் தனது கணவருக்கும் சொந்தமாக இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 44 வயதாகும் சந்தோஷ் சர்மா என்பவரின் நிறுவனத்துடன் கடந்த 2014ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
ஒப்பந்தப்படி எங்கள் காலியிடமான 2.10 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான தனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டிருந்தோம்
ஆனால் நிலத்தின் உரிமையாளரான எனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை தனக்கு தெரியாமல் விற்றுள்ளனர். அதுவும் எப்படி என்றால், எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளியே விற்பனை செய்திருக்கிறது. அதன் மூலம் அவரது நிறுவனம் சுமார் ரூ.43 கோடி மோசடி செய்திருக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரான அடையாறு கற்பகம் கார்டன், 1வது மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் சந்தோஷ் சர்மா மற்றும் அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளரான சென்னை ஷெனாய்நகர் ராஜம்மாள் தெருவைச் சேர்ந்த 33 வயதாகும் சாகர் மற்றும் மோசடியில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் பூர்ண ஜோதி தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதில், புகாரில் தெரிவித்த தகவல்கள் உண்மை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் புகாருக்குள்ளான சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே இப்போது வெளியான தகவலின் படி, தனியார் கட்டுமான நிறுவனத்தின உரிமையாளரான கைதான சந்தோஷ் சர்மா ஒரே வீட்டை பலருக்கு விற்று பொது மக்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஏற்கெனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்குகள் இருக்கிறதாம். ஒரே வீட்டை பலருக்கு விற்ற புகாரில் சிக்கிய சந்தோஷ் சர்மா, இப்போது விஜயகாந்தின் மைத்துனர் மனைவியிடமும் மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications