Low Pressure Area: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 10 நாட்களில் நடக்கும் மேஜிக்.. டெல்டா வெதர்மேன்
சென்னை: தெற்கு வங்கக்கடலில் அடுத்த 10 நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். இதன் காரணமாக பிப்ரவரி 20 ஆம் தேதியையொட்டி பனியின் தாக்கம் குறைந்து, தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தெற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப் பகுதியில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 22 ஆம் தேதி தமிழக கரையை நெருங்கும் என கணித்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் இந்த மாத இறுதியிலும், வரும் மார்ச் தொடக்கத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

விடை பெற்ற வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையிலும் ஒருசில இடங்களில் மழை அவ்வப்போது பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரி 1 ஆம் தேதி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் அதனை தொடர்ந்து பொங்கலையொட்டி ஒரு 3 நாட்களுக்கு மழை பெய்தது. எனினும் பனியின் தாக்கமே அதிகமாக இருந்தது.
ஜனவரி மாத இறுதியில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின. தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலே அடித்து வரும் நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சிறிது சிறிதாக வெப்பநிலையும் கூடி வருகிறது. இந்த சூலலில் தான் மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், அடுத்த 10 நாட்களில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை கடற்கரையையொட்டி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வரும் 22 ஆம் தேதி வாக்கில் தமிழக கடற்கரையை நெருங்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிப்ரவரி 20 ஆம் தேதியையொட்டி பனியின் தாக்கம் குறைந்து, தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதனை பொறுத்து மழையின் தீவிரம் என்பது இருக்கும்" என்று கூறியுள்ளார். இதேபோல் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், பிப்ரவரி மாத இறுதியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும், ஆனால் ஒரு சில ஆண்டுகளில் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்திருப்பதால், இந்த ஆண்டும் மழை பெய்ய கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 18 அல்லது 19 ஆம் தேதிக்குள் மழை பெய்யுமா இல்லையா என்பது முழுவதுமாக தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications