ரூல்ஸ் பின்பற்றினால் 'ஹூக்கா' வைக்க தடையில்லை! சென்னை உணவகங்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஹூக்காவில் 70 சதவீதம் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. புகைப்பிடிப்பதை காட்டிலும் ஹூக்கா புகைப்போர் பல மடங்கு புகையை உள்ளிழுப்பதால் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை: ரெஸ்டாரண்டுகளில் சிகரெட் பிடிப்பதற்கான சட்ட விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில், அங்கு 'ஹூக்கா' வைத்திருக்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஹூக்கா சர்வீஸ் வைத்திருக்கும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சிகரெட்டை விட ஆபத்தானது
ஒரு கண்ணாடி குடுவையில் இணைக்கப்பட்டுள்ள பைப் மூலமாக சிலர் புகையை இழுப்பதை பார்த்திருப்போம். அதுதான் ஹூக்கா. பொதுவாக, ஹூக்கா ஆபத்தானது இல்லை என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மையில் இது சிகரெட்டை விட பல மடங்கு ஆபத்தை தரக்கூடியது. ஹூக்காவில் 70 சதவீதம் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. அதன் பெயர் கார்சினோஜென்கள். புகைப்பிடிப்பதை காட்டிலும் ஹூக்கா புகைப்போர் பல மடங்கு புகையை உள்ளிழுப்பதால் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸார் வழக்கு
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் இந்த ஹூக்கா சர்வீஸ் இயங்கி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சோதனை நடத்திய போலீஸார் ஹூக்கா இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

"சட்டப்படிதான் நடக்கிறது"
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது ரெஸ்டாரண்ட்டில் புகைப்பிடிப்பதற்காகவே தனியான அறை உள்ளது. அரசு விதிமுறைகளின் படி அந்த அறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை பலகைகளும் அதன் வாயிலிலேயே வைக்கப்பட்டுள்ளன. 21 வயதுக்கு உட்பட்டவர்களை நாங்கள் அனுமதிப்பது கிடையாது. மேலும், எனது ரெஸ்டாரண்ட் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 100 யார்டு தொலைவு வரை பள்ளி, கல்லூரிகள் கிடையாது. அப்படியிருக்கையில், ஹூக்காவை தயாரிக்கும் பொருட்களை வைத்திருந்ததாக கூறி என் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹூக்காவுக்கு தடைவிதிக்கப்படாத பட்சத்தில், என் மீது எப்படி வழக்கு பதிய முடியும். எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கோரியிருந்தார்.

"மசோதா மட்டுமே தாக்கல்"
இந்நிலையில், இந்த மனுவானது நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்: சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட்டில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் தடை சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதாக மனுதாரர் கூறுகிறார். புகைப்பிடிப்பதற்கு தனியாக ஒரு அறையும் அங்கிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஹூக்காவை தடை செய்யும் மசோதா மட்டுமே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் சட்டமாகவில்லை.

"எந்த தடையும் இல்லை"
அப்படியிருக்கும் போது, ஹூக்காவை ரெஸ்டாரண்ட்டில் வைத்திருப்பதாக அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர். சட்டம் குறித்த தவறான புரிதல் காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். புகைப்பிடிப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில், ரெஸ்டாரண்ட்டில் ஹூக்கா சர்வீஸ் இருப்பதில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications