அல்லா மன்னிக்கவே மாட்டார்.. ஜீ தமிழில் முருகன் பாடல் பாடிய சிறுமிக்கு சாபமிட்ட நபர்
சென்னை: ஜீ தமிழில் வெளியாகும் சரிகமப நிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்த சிறுமி ஒருவர் முருகன் பாடலை பாடி கவனம் ஈர்த்தார். இவர் பாடிய இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முருகன் பாடலை பாடிய சிறுமியை அல்லா மன்னிக்கவே மாட்டார் என்று ஒருவர் சாபமிட்ட வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சரிகமப' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்த ஹஸ்னா முபாரக் என்ற சிறுமி முருகன் பாடலை பாடினார்.

'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்' என்ற பாடலை பாடினார். இந்த வீடியோ கவனம் பெற்றது. சிறுமியின் குரலை கேட்டவர்கள், பாடலை பாடிய விதத்தைப் பாராட்டி வருகிறார்கள்.
அதேவேளையில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பொதுவாக இசைக்கு மதம், மொழி, ஜாதி என எதுவும் கிடையாது. அப்படியிருந்தாலும் இஸ்லாமிய சிறுமி எப்படி முருகன் பாடலை பாடலாம். இது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரானது என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஒருவர் ஹஸ்னா முபாரக் சிறுமிக்கு சாபமிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூஜை வைத்தேனா.. இதை ஒரு அரங்க மேடையில் இருந்து கொண்டு பாடி கொண்டிருக்கிறார் ஒரு பெண். இப்படியொரு நிலைமையை செய்ய வைத்தது யார்?.
பெற்றோரோ.. ஜீ தமிழ் என்கிற ஊடகமா? தங்களின் ஊடகத்துக்கு காசு வர வேண்டும் என சொல்லி வியூஸ், லைக்ஸ் மற்றும் பப்சிளிசிட்டிக்காக எந்த அளவுக்கு ஒரு மதத்தை கேவலப்படுத்த முடியுமோ? ஒரு மார்க்கத்தை கேவலப்படுத்த முடியுமோ? ஒரு மார்கத்தின் விழுமியங்களை கேவலப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ தான்.
இஸ்லாமிய விழுமியங்களையும், மத நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த யாருக்கும் அனுமதியில்லை. இந்த செயலுக்கு அல்லாவிடம் மன்னிப்பு என்பதே இல்லை. எந்த குற்றத்தையும் மன்னிப்பதாக சொல்லும் அல்லா தனக்கு இணை வைப்பதை மட்டுமே மன்னிக்க மாட்டேன் என்று குரானில் கூறியுள்ளார். அதை மறந்து விடாதீர்கள்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை போய் பாருங்கள். எத்தனை பாடல் வீடியோக்கள் இருக்கிறது. ஆனால் எதிலுமே அவர் இஸ்லாமிய ஆடையுடன் காட்சியளிக்கவில்லை. ஆனால், இந்த புரோகிராமில் முருகனை போற்றி புகழ்ந்து பாடும் காணொளியில் முஸ்லிம் தோற்றத்தில் உள்ளார். எனவே ஜீ தமிழின் இந்த கேவலமான செயலை சேர்ந்து கண்டிக்கலாம்'' என்று கொந்தளித்துள்ளார். இதுதவிர ஜீ தமிழ் சேனல் மற்றும் நடுவர்களாக இருப்பவர்களையும் அந்த நபர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications
