அத விடுங்களேன் சார்.. நானும் சாப்பிடுற ஆள் தான்.. பீஃப் பிரியாணி கேள்விக்கு அமைச்சர் மா.சு. பதில்!
சென்னை: சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்காததால் தான், பீஃப் பிரியாணி அரங்கு அமைக்கப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாள் நடைபெறும் உணவுத் திருவிழா தொடங்கி உள்ளது. சிங்காரச் சென்னை 2022 உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாட்டிறைச்சி சர்ச்சை
இந்த உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு என அரங்கு அமைக்கப்படவில்லை. ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பீஃப் பிரியாணி ரத்து செய்யப்பட்டது பல்வேறு சர்ச்ச்சைகளை ஏற்படுத்தின. இதன்பின்னர் உணவுத் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை உணவுத் திருவிழா
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவிலும் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அரங்கு அமைக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் இங்கும் தவிர்க்கப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன் பதில்
பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உணவுத் திருவிழாவில், அனைத்து உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பீஃப் பிரியாணி தவிர்க்கப்பட்டது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தொடக்க முயற்சி. இதுபோல் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. அரசு தரப்பில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். பின்னர் ஆங்காங்கே இருக்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து வரும் காலங்களில் உணவு திருவிழா நடத்தப்படும்.

தனிமனித உரிமை
மாட்டிறைச்சி பிரியாணி பொறுத்தவரை, அதை வழங்கினாலும் கேள்வி எழுப்பப்படும். வழங்கவிட்டாலும் கேள்வி எழுப்பப்படும். அதை அரசியலாக்க வேண்டாம். நானும் மாட்டிறைச்சி சாப்பிடும் மனிதன் தான். அதுமட்டுமல்ல, பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல் உணவு என்பது அவரவரின் தனிமனித உரிமை. எந்த உணவை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications