நோ சான்ஸ்.. கொரோனா கால நர்ஸ்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.. தமிழக அரசு அரசாணை..கிளம்பிய எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நர்ஸ்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் ஜனவரியில் அதிகரிக்கலாம். அடுத்த 40 நாட்கள் முக்கியம் என சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு எச்சரிக்கை செய்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு இந்த வைரஸ் அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
2020 துவக்கத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. மேலும் மொத்தம் 180க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்காலிக நர்ஸ்கள் நியமனம்
இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இதனால் இந்தியாவில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிகமாக நர்ஸ்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ரூ.14 ஆயிரம் சம்பளத்தில் வேலை
அதன்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 2,300க்கும் அதிகமானவர்கள் நர்ஸ்களாக பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

பணி நீட்டிப்பு இல்லை என அரசாணை
இவர்கள் 2020 மார்ச் மாதத்துக்கு பிறகு 6 மாத காலத்துக்கு நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு முறை அவர்களின் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். இவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக சுகாதாரத் துறையின் மருத்துவ கல்வி இயக்குனரகம், ஊரக நலப் பணிகள் துறை உள்ளிட்டு துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கிளம்பிய எதிர்ப்பு
இதற்கு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2019ல் கொரேனாா வைரஸ் பிறந்ததாக கூறப்படும் சீனாவில் தற்போதும் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா வைரஸ் இந்தியா வந்த 4 பேருக்கு கண்டறியப்பட்டது. மேலும் அடுத்த 40 நாள் முக்கியம். இந்தியாவில் கொரோனா பரவல் என்பது ஜனவரியில் உச்சம் தொடலாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக நர்ஸ்களின் பணி நீட்டிப்பு வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக நர்ஸ்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications