அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்.. இபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!
சென்னை: அதிமுகவின் சட்டவிதிகளின்படி தற்போது வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் விரும்புகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்போ இரட்டை தலைமைதான் சரிபட்டு வரும் என்கிறார்கள். இதனால் இவர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.
ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. அவர் திமுகவுடன் நட்பு பாராட்டுகிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்து வருகிறார்கள். அதிமுக பொதுக் குழுவானது 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவித்துவிட்டது.

காலாவதி
இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவிக்கிறார்கள். தற்போது ஓபிஎஸ் வெறும் பொருளாளர் மட்டுமே என்றும் இபிஎஸ் தலைமை நிலைய செயலாளர் என்றும் தெரிவிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுகிறார். இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது கூட ஒருவரை ஒருவர் வரவேற்றுக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் பதவி
அது போல் இன்றைய தினம் குடியரசுத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்துள்ளார். அவர் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வுக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் , ஓபிஎஸ் தரப்பும் வந்திருந்தனர்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு வரும் வரை தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். இதையடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது முதலில் எடப்பாடி பழனிச்சாமியே முர்முவை சந்தித்து வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார். அந்த மேடையில் ஓபிஎஸ் வரவில்லை.

ஆதரவு
இபிஎஸ் தரப்பினர் ஆதரவு தெரிவித்துவிட்டு சென்ற பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வரிசையில் நின்று ஓபிஎஸ், திரௌபதி முர்முவை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் திரௌபதி முர்முவை வரவேற்கிறேன். அதிமுகவின் ஆதரவு அவருக்குத்தான் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் சந்திப்பு
இதையடுத்து ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் கூறுகையில் அதிமுகவின் சட்டவிதிகளின்படி தற்போது வரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றார். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலில் படிவங்களில் கையெழுத்திட தான் தயார் என ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications