"இரட்டையருடன்" பயணிக்க விரும்பாத கோவை செல்வராஜ்.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. பரபரக்கும் கோவை
சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜை கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை வெளிப்படையாக கடந்த ஜூன் மாதம் முதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பொதுக் குழு வழக்கு தொடர்பாக டிசம்பர் 6 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்கு முக்கிய நபராக கருதப்பட்ட கோவை செல்வராஜ் திடீரென அரசியல் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும் போது இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை.
கோவை செல்வராஜ் விலகல் ஏன்? ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காதது ஏன்?

சுயநலம்
அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டை போடுகிற இவர்களுடன் சேர்ந்து கொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது என முடிவு எடுத்துள்ளேன். இதனால் இவர்களிடமிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். கொடநாடு கொலை , கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோவை செல்வராஜ் கோரியிருந்தார்.

சுளீர் பதிலடி
எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், கே பி முனுசாமி உள்ளிட்டோருக்கு சுடச்சுட பதிலடியையும் பாயிண்ட் பாயிண்ட்டாக கொடுத்து வந்தார். இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த கோவை செல்வராஜ் விலகிய சம்பவத்தை தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் உடனடி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

புதிய நிர்வாகிகள் நியமனம்
அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவை K.செல்வராஜ், M.A., Ex. M.L.A. அவர்கள் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த மூன்று மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் மாநகர் வடக்கு, கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் வடக்கு என நான்கு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

4 நிர்வாகிகள் நியமனம்
இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று (நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
1. திரு. D.மோகன் அவர்கள் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை தெற்கு, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள்)
2. திரு. சுப்ரீம் L. இளங்கோ அவர்கள், கோயம்புத்தூர் மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிகள்)
3. திரு. குறிஞ்சி M. மணிமாறன் அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகள்)
4. திரு. சூலூர் P. ராஜேந்திரன், B.A., B.L., அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை வடக்கு, சூலூர் சட்டமன்றத் தொகுதிகள்)
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.