கோதாவில் குதிக்கும் ஓபிஎஸ்.. வேட்பாளர் அறிவிப்பு.. மாலையில் நல்ல செய்தியாம்- வைத்திலிங்கம் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் பற்றிய நல்ல செய்தியை ஓபிஎஸ் மாலையில் சொல்வார் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அணி தரப்பு வேட்பாளர் மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசை அறிவித்துள்ளது. இதனால், வேட்பாளர் பற்றிய நல்ல செய்தியை ஓபிஎஸ் மாலையில் சொல்வார் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று காலை திடீரென வேட்பாளர் அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி ட்விஸ்ட்
அதேபோல் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனை பேனரில் பாஜக தலைவர்களின் புகைப்படங்களும் இல்லை. அதுமட்டுமல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இடம்பெற்றது. இதன் மூலம் பாஜக கூட்டணியை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி புறக்கணித்து உள்ளதாக பார்க்கப்படுகிறது.

மாலை நல்ல செய்தி
இந்த சலசலப்பு ஒருபுறம் இருக்க, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று மாலை வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய நல்ல செய்தியை இன்று மாலை சொல்வார் என்று தெரிவித்துள்ளார்.

யாருக்கு வாய்ப்பு?
ஓ.பன்னீர் செல்வம் அணி தரப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கக் கூடிய முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அப்பகுதியின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாலை அறிவிப்பு?
ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இதனிடையே பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்க தாமதம் செய்து வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
