அவசர ஆலோசனை.. இன்றைய மீட்டிங்கால் டென்ஷன்.. வீட்டில் முக்கிய தலைகளை சந்தித்த ஓபிஎஸ்.. பரபர அரசியல்!
சென்னை : அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு எதிராக நடந்த விஷயத்தால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து, முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தனது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வைத்தியலிங்கம், காமராஜ், மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதே நேரத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது அதிமுக அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சித் தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. இதையடுத்து, அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் அடித்துப் பிடித்து ஓடி வந்து கோஷம் எழுப்பியவர்களை சமாதானப்படுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
அலுவலகத்திற்கு வெளியே ஒலித்த குரல் உள்ளே நடந்த கூட்டத்திலும் எதிரொலித்தது. இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தியுள்ளனர். மேலும், நான்காண்டு காலமாக அதிமுக ஆட்சியை வழிநடத்திய எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிய வேண்டும்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனக்கு எதிராகத் திரும்பியதால் ஒ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிய வேண்டும் என்றும், அ.தி.மு.கவில் 20 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைவராக இருப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்செட்டான பன்னீர்
இதனால் கூட்டத்தில் சலசலப்பு உருவாகியுள்ளது. ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக பேச எழுந்த சிலரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஆஃப் செய்யப்பட்டு அமரவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றும் பேசாமல் கிளம்பியுள்ளனர். இன்றைய கூட்டத்தில் தனக்கு எதிராக நடந்த விஷயத்தால் ஓ.பி.எஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை
இதையடுத்து, தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓபி.எஸ். சற்று முன்பு ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வைத்தியலிங்கம், காமராஜ், மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்துப் பேசினர்.

எடப்பாடி பழனிசாமியும் மீட்டிங்
இதற்கிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ் ஒருபக்கம் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இ.பி.எஸ் ஒருபக்கம் மூத்த நிர்வாகிகளுடன் பேசி வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து என்ன?
கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருப்பதை புரிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், தனது இடத்தை நிறுவுவதற்காக அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. கட்சியில் தனக்கான குரல்களை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு அவர் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications