ஓபிஎஸ் புது கட்சி தொடங்கப்போறாரா? நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கூட்டம்! கொளுத்திப் போட்ட எடப்பாடி டீம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம், புதிய கட்சிக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யவே இந்தக் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டுகிறார் எனக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.
பிளவுபட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதல்முறையாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஓபிஎஸ்ஸின் இந்த நகர்வு தனக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன், தடாலடியாக ஒரு கருத்தை உதிர்த்துள்ளார்.

ஈபிஎஸ்ஸுக்கு சாதகம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவு அவருக்கு சாதகமாகவும், அதன்பிறகு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் வந்தது.

விசாரணை
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த விசாரணை வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மா.செக்கள் கூட்டம்
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிசாமி அதிருப்தியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பதவிகளை வழங்கி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரை நியமித்துள்ளார் ஓபிஎஸ். இந்நிலையில் தான் நாளை ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் திட்டம்
அதிமுக அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், தனது தலைமையில் ஒரு அணியும் இயங்கி வருகிறது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிறுவ ஓபிஎஸ் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் ரெடி
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அது தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதனைத் தொடர்ந்து விரைவில் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் ஓபிஎஸ் ரெடியாகி வருகிறாராம்.

உற்று கவனிக்கும் ஈபிஎஸ் அணி
ஓபிஎஸ்ஸின் இந்த நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்றுக் கவனித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு எவ்வளவு விரைவாக வெளியாகிறதோ அவ்வளவு நமக்கு நன்மை என்று ஈபிஎஸ் கருதுகிறாராம். விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி, முழுமையாக கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பது ஈபிஎஸ்ஸின் எண்ணமாக இருக்கிறது. அதற்குள் ஓபிஎஸ் போடும் இந்த ரூட் எடப்பாடிக்கு சிக்கலைக் கொடுத்திருக்கிறது.

பொன்னையன் பற்றவைக்கும் வெடி
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவின் ஒரு உறுப்பினராக கூட இல்லை. அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. அதிமுகவுக்கு அவர் திரும்பி வர எந்த வாய்ப்பும் இல்லை. தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு கொண்டு வருகிறது.

புதிய கட்சி தொடங்கும் ஓபிஎஸ்
உண்மையான நிலைமை இப்படியிருக்க ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்ட இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். புதிய கட்சிக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யவே இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்ட வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர அவருக்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஹா.. போட்டி!
அதிமுக வழக்கில் தனது கையை ஓங்கச் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, ஈபிஎஸ் தரப்பினர் கண்டுகொள்ளாதது போல, இவ்வாறு தடாலடியாக 'ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கப் போகிறார்' என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்து வந்தாலும், ஓபிஎஸ்ஸின் இந்த நகர்வு தங்களுக்கு மேலும் குடைச்சலாக மாறும் என்றே ஈபிஎஸ் கருதுகிறாராம். இதனால், தானும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications