ஆரம்பிச்சிட்டாங்கல்லே.. இ-பாஸ் முறையை குஷியுடன் வரவேற்ற ஊட்டி மக்கள்.. ஆனாலும், ஒரு சிக்கல் இருக்கே?
சென்னை: நீதிமன்றத்தின் இ பாஸ் நடைமுறையை ஊட்டி மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.. என்ன காரணம் தெரியுமா?
கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இ - பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும், உள்ளூர் மக்களும் நடமாட இயலாது, சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.. இதையடுத்து, தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறதாம்..
வாகனங்கள்: இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போலவே, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
எனினும், இந்த புதிய உத்தரவு காரணமாக ஊட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் வரவேற்றுள்ளனர்.. இதற்கு காரணம், எப்போதுமே, கோடையில் நீலகிரி மாவட்டமே சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும்.. அதுவும் இல்லாமல் இப்போது சமவெளிப்பகுதியில் வெய்யில் அதிகம் என்பதால் ஊட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நெரிசல் அதிகம்: வழக்கமான நாட்களில் 2 ஆயிரம் வாகனங்கள் வந்துசெல்லும் நிலையில், சீசன் நேரங்களில் மட்டும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் வாகனங்கள் ஊட்டிக்கு வந்து செல்லும்.. இதனால், சீசன் நேரத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாகவே காணப்படும்.
முக்கியமாக, ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். இது உள்ளூர் மக்களுக்கு மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்திவிடும்.
காலையில் 6 மணியிலிருந்தே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும்.. மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதால், உள்ளூர் மக்களால் அவசரத்துக்குகூட எங்குமே வெளியில் செல்ல முடிவதில்லை.. இப்போது இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையால், நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
வாகனங்கள் நச்சுப்புகை: அதுமட்டுமல்ல, பல வாகனங்களின் நச்சுப்புகைகள், மலைமாவட்டத்தின் இயற்கை வளத்தையே பாதித்துவிடும் அபாயம் இருந்த நிலையில், தற்போதுநீலகிரியின் பசுமை காக்கப்படும் என்று மகிழ்ந்து சொல்கிறார்கள் ஊட்டி மக்கள்.
உள்ளூர் மக்கள் இப்படி சொன்னாலும், ஊட்டி வியாபாரிகள் நேற்றிலிருந்தே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.. இது ஒரு சுற்றுலா தலம் என்பதால், சீசனில் மட்டும் வியாபாரம் நடக்கும்.. குறிப்பாக, கோடையில் 2 மாதங்களில் நடக்கும் வியாபாரத்தையை முழுமையாக நம்பியிருக்கிறார்கள்..
சுற்றுலா பயணிகள்: இ-பாஸ் காரணமாக, ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்கவும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவதுடன், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று கலக்கம் தெரிவிக்கிறார்கள். எனவே, தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன், இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த போகிறார்களாம்..!!!












Click it and Unblock the Notifications