டெல்டா விவசாயிகளுக்காக குரல் எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி.. தெருவில் நிற்பதாக குமுறல்
சென்னை: தமிழக அரசின் மெத்தனமான நடவடிக்கையால் விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வாங்கித் தரவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விடியா அரசு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்தன. இது குறித்து, வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று, சென்ற ஆண்டு நான் இந்த ஆளும் விடியா தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.

அதிமுக ஆட்சியில்
அம்மாவின் அரசு ஆட்சிபுரிந்தபோது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2017-2018 முதல் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் நிவாரணத் தொகையாக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு பெற்றுத் தந்தது. அதன்படி, அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடி கள ஆய்வு செய்து, பாதிப்புகளுக்கு ஏற்ப ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ.7,000/- முதல் அதிகபட்சமாக பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது.

பயிர் காப்பீட்டுத் திட்டம்
ஆனால், சில நாட்களுக்கு முன்பு, இந்த விடியா அரசு 2021-2022-ம் ஆண்டுக்கு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.480 கோடியை பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கியது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு குறைந்தபட்சமாக வெறும் ரூ.250/- மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

எனது அறிக்கை
விடியா அரசின் வேளாண் துறை அமைச்சர் எனது அறிக்கையில் உள்ள உண்மைகளை புரிந்துகொள்ளாமல் பொத்தாம் பொதுவாக பதிலளித்தார். எனினும், அதிகாரிகள் குழு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்திக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே கணக்கெடுப்பு என்ற பெயரில் புள்ளி விவரக் குறிப்பை இந்த அரசுக்கு அனுப்பி வைக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்கள் நேரில் சென்று, துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி கள ஆய்வு செய்து உண்மையான சேத விவரங்களை அரசுக்கு அனுப்புமாறும், மீண்டும் நான் வற்புறுத்தினேன்.

நடுத்தெருவில் நிற்கும் அவலம்
ஆனால், இந்த விடியா அரசு நேரில் சென்று பாதிப்புகளை கணக்கெடுக்காததன் விளைவு, இன்று விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையைக் கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த விடியா அரசு பெற்றுத்தரவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

மெத்தனம்
'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என்று செயல்படும் இந்த விடியா அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்தவிதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், விவசாயப் பெருமக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் உயரிய நோக்கில் மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications