தனித்தனியாக ஓபிஎஸ், ஈபிஎஸ் மீட்டிங்.. பிரதமர் மோடியுடன் 28ஆம் தேதி இரவு ஆலோசனை.. பரபரக்கும் அதிமுக!
சென்னை : நாளை மறுநாள் சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை அன்றிரவு 8 மணிக்கு மேல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு, டெல்லியின் ஆதரவைப் பெறுவதில் இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான திட்டங்களோடு, இருவரும் தயாராகி உள்ளனர். இதனால், அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை வரும் மோடி
சென்னையில் நாளை மறு நாள் (ஜூலை 28ஆம் தேதி) செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

பிரதமரின் பயணத் திட்டம்
ஜூலை 28ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்திற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கை சென்றடைவார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்குப் பிறகு, அவர் சாலை வழியாக ராஜ் பவனுக்குச் சென்று அங்கு இரவு தங்குகிறார். அங்கு இரவு நேரத்தில், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் 17 மணி நேரம்
அதைத்தொடர்ந்து 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கிண்டியில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காலை 11.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் அகமதாபாத்துக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி சுமார் 17 மணி நேரம் சென்னையில் இருப்பார்.

பிரதமரை சந்திக்க நேரம்
சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தில் தன் முயற்சி பலிக்காததால் பாஜக தலைமையின் ஆதரவை நம்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு முடிந்ததுமே பாஜக தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாத நிலையில், பாஜகவின் மேலிட புள்ளிகளைச் சந்தித்து விட்டு திரும்பினார்.

ஈபிஎஸ் திட்டம்
எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்பே டெல்லியில் சென்று சந்தித்துப் பேசும் திட்டத்தோடு கடந்த 22ஆம் தேதி டெல்லிக்குச் சென்றார். ஆனால், தொடர்ச்சியான அலுவல் பணிகள் காரணமாக நேரமில்லை எனக் கைவிரிக்கப்பட்டதால் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசாமலேயே சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் சென்னை வரும்போது சந்திக்கலாம் என பாஜக தரப்பு ஈபிஎஸ்ஸை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இருவரும்
இந்நிலையில், நாளை மறு நாள் சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்து, அதிமுக பிரச்சனை பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தயாராகி வருகின்றனர். கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவையும், செல்வாக்கையும் பிரதமர் மோடிக்குப் புரியவைத்து, மேலிட ஆதரவை தன் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக, தமிழக பாஜக புள்ளிகளிடமும் ஈபிஎஸ் பேசியுள்ளதாகத் தெரிகிறது. ஓபிஎஸ் முன்பிருந்தே மோடி உடன் இணக்கமான உறவைப் பேணி வருவதால் அவருடனான சந்திப்புக்கும் டெல்லியின் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

28ஆம் தேதி இரவில்
இதையடுத்து 28ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரதமர் மோடியைச் சந்திக்க, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருமே ஒவ்வொரு முறை டெல்லி சென்றும், ஏமாற்றமே பதிலாக வந்த நிலையில், சென்னையில் சந்திக்கும் வாய்ப்பை கெட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஓபிஎஸ் தேவையில்லை என்பதை எடப்பாடி வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், இணைந்து செயல்பட உதவுமாறு ஓபிஎஸ் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைவார்களா?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னிர்செல்வம், தர்ம யுத்தம் நடத்தி பிரிந்து சென்ற நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்து ஓபிஎஸ்ஸை துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ததே டெல்லிதான். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றே, எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்பட முடிவெடுத்ததாக வெளிப்படையாகவே செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ். அதேபோல, இந்த முறையும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு பிரதமர் மோடியால் சாத்தியமாகுமா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications