"ஓவர் கான்பிடன்ஸ்".. அதான் ஸ்டாலின்.. நிதிஷ் நிலைமைதான் எடப்பாடிக்கும்.. பாஜக மீது பாயும் சிவசங்கர்
தமிழக போக்குவரத்து துறை எஸ் எஸ் சிவசங்கர் நம் ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: திமுகவுக்கு எதிராக, ஒரு பெரிய கூட்டணி அமையபோகிறது என்ற மாயத்தோற்றத்தை பாஜக, அதிமுக உருவாக்க முனைகிறார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைய போகிறது என்று எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் கூட்டத்தில் கூறியிருந்தார். அதேபோல, அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நடுவில், திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று டிடிவி தினகரனும் அறிவித்தார்.. இப்படி அதிமுக, பாஜக, அமமுக என பிரதான கட்சிகள் திமுகவை குறி வைத்து தமிழக அரசியலை அதிர வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது, இத்தனை கட்சிகளும் திமுகவுக்கு எதிரான கூட்டணி வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அமைச்சர் சிவசங்கர் நமக்கு அளித்த பதில்தான் இது:

வாஜ்பாய்
"இது வாஜ்பாய் காலம் அல்ல, அமித்ஷாவின் காலம்.. கொஞ்சம் பாஜகவின் வரலாற்றை திரும்பி பாருங்கள்.. பீகாரில் என்ன நடந்தது? தேர்தலின்போது நிதிஷ்குமாரை முன்னிறுத்தினார்கள்.. ஆனால், நிதிஷ்குமாரின் வேட்பாளருக்கு எதிராக, சிராஜ் பஸ்வானை எதிரணியாக போட்டியிட வைத்து, நிதிஷ்குமார் வேட்பாளரை தோற்கடித்து, பாஜக தன் கையில் அதிகாரத்தை கொண்டு வர முனைந்தார்கள்.. வேறு வழியில்லாமல், நிதிஷ்குமாரை ஆட்சியில் நிறுத்தினாலும், ஒரு கட்டத்தில் அவர்களையே விழுங்க பார்க்கவும்தான், நிதிஷ்குமார் விழித்து கொண்டார்..

பூமிபுத்ரன்
பாஜக தன் வேலையை காட்ட துவங்கிவிடும் என்பதை உணர்ந்து, லாலு கட்சியுடன் கூட்டணி வைத்து, அங்கு அரசியலையே மாற்றிவிட்டார்.. அதுபோலத்தான் மகாராஷ்டிராவும்.. சிவசேனாதான் இவர்களுக்கு காலம்காலமாக இருந்த கூட்டணி கட்சி.. காரணம், இருவருமே இந்துத்துவா கொள்கையை கொண்டிருப்பவர்கள்.. ஆனால், சிவசேனாவுக்கு இந்துத்துவாவை தாண்டி, வேறு ஒரு கொள்கையும் உள்ளது.. பூமிப்புத்திரன் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.. அதிகாரத்தை கைப்பற்றி, ஒரு பிராமணரை உள்ளே நுழைக்க வேண்டும், பட்னாவிஸை முதல்வராக்க வேண்டும் என்று முனைந்தபோது, அவர்களும் விழித்து கொண்டார்கள்..

பொம்மலாட்டம்
இத்தனைக்கும் அமலாக்கத்துறை, சிபிஐ இத்தனை விஷயங்களையும் கையில் வைத்து கொண்டு, அவ்வளவு நசுக்கியது என்பது எல்லாருக்கும் தெரியும்.. அப்படித்தான், தமிழ்நாட்டிலும் நடக்கும்.. இன்னைக்கும் எடப்பாடி தரப்பின்மீது வருமானவரித்துறை பாய்ந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஓபிஎஸ் என்று இருவரையும் வைத்து ஒரு பொம்மலாட்டம் நடத்தி, அதிமுகவை வலுவிழக்க செய்து, தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை கொண்டு வருவதுதான் பாஜகவின் நோக்கம்.. அந்த நோக்கத்தில் செயல்பட்டும் வருகிறார்கள்.. தேர்தல் நேரத்தில் அதிமுகவை சிதறடிக்க வைத்து, பலவீனப்படுத்தி, தங்கள் தலைமையில் கூட்டணி வைத்து, அதிகாரத்தை செலுத்தவே முனைந்து கொண்டிருக்கிறார்கள்..

ஸ்டாலின்
திமுகவுக்கு எதிரான கருத்தை, இவர்களை வைத்தே தெரியப்படுத்துகிறார்கள்.. அதன்மூலம் திமுகவுக்கு எதிராக, ஒரு பெரிய கூட்டணி அமையபோகிறது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள்.. எனினும், திமுக அரசு எப்படி செயல்படுகிறது என்பதையும், மோடி தலைமையிலான அரசு எப்படி செயல்படுகிறது என்பதையும், மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.. அந்த ஒப்பீடுதான் தேர்தல் நேரத்தில் மக்களின் எண்ணமாக வெளிப்படும்.. தற்போதைய தமிழக முதல்வரிடம் எந்த மனுவை கொண்டு போய் கொடுத்தாலும் அதற்கு ஒரு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், எந்த கிராமத்துக்கு போனாலும், மனுக்கள் குவிகிறது என்றால், அதற்கு காரணம் முதல்வர் மீதான அபரிமிதமான நம்பிக்கைதான்" என்றார் சிவசங்கர்.












Click it and Unblock the Notifications