இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தள்ளிய பழ.நெடுமாறன்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும்.
Recommended Video
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பல்வேறு திட்டங்களை முதலவர் மு.;க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை " இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " என பெயர் மாற்றம் செய்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

பழ.நெடுமாறன் பாராட்டு
இந்த நிலையில் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்து, முகாம்களில் உள்ள ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு சுமார் 320கோடி ரூபாய் செலவில் கீழ்க்கண்ட நலத்திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை உளமார வரவேற்றுப் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

இது பேருதவி
முகாம்களில் உள்ள பழுதடைந்த வீடுகளைப் புதிதாகக் கட்டுதல், கழிப்பிட, குடிநீர், மின்சார வசதிகள் அளித்தல், குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளித்தல், 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி உதவி, அகதிகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, எரிவாயு இணைப்பு, அடுப்பு அளித்தல், மாதந்தோறும் 20கிலோ இலவச அரிசி, அனைவருக்கும் கைத்தறி ஆடைகள், போர்வைகள், இலவச சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் அளிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஈழத் தமிழர் அகதி குடும்பங்களுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாகும்.

கோரிக்கை வைத்தார்
இதற்காக முதல்வரை மீண்டும் பாராட்டுவதோடு, கீழ்க்கண்டவற்றையும் நிறைவேற்ற முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன். முகாம்களுக்கு வெளியே சென்று வேலை பார்க்கவும், சிறு தொழில்கள், வணிகம் நடத்தவும் அனுமதி வழங்கவேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றையும் நிறைவேற்றி உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய அரசு மறுக்கிறது
உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அந்த அகதிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளை முழுமையாக ஐ.நா. அகதிகள் ஆணையம் அளித்து வருகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தங்களின் தாயகம் திரும்பி தங்கள் வாழ்வை புனரமைக்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்கிறது. ஆனால், ஐ.நா. அகதிகள் ஆணையம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவ முன்வந்த போதிலும், அதை அனுமதிக்க இந்திய அரசு மறுக்கிறது. எனவே, முதலமைச்சர் இந்திய அரசுடன் பேசி இதை நிறைவேற்ற முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications