சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நொடியே வாழ்ந்தாலும் கோடி மின்னலாய் மின்ன வேண்டும்.. மறக்க முடியாத பரிதி

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்- வீடியோ

    -ஆர். மணி


    சென்னை: முன்னாள் தமிழக சட்டசபை எம்எல்ஏ பரிதி இளம்வழுதி மரணமடைந்து விட்டார். அவருடைய வயது. 58. தலித் சமூகத்தை சேர்ந்த பரிதி இளம்வழுதியின் தந்தை இளம்வழுதி 1950 மற்றும் 1960 களில் அன்றைய திமுக வின், ஒருங்கிணைந்த சென்னை மாநகர செயலாளராக இருந்தவர். பரிதி இதுவரையில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

    1984 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் திமுக வின் வேட்பாளராக போட்டியிட்டார். இதுதான் அவர் போட்டியிட்ட முதல் தேர்தல். அப்போது ஒரு சுயேச்சை வேட்பாளர் கொல்லப்பட்டதால் தேர்தல் 1985 பிப்ரவரியில் நடைபெற்றது. அவரை எதிர்த்து களம் கண்டது, அஇஅதிமுக வின் சத்தியவாணி முத்து. பரிதி இதில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழக எம்எல்ஏ வாகி சட்டமன்றத்திள்குள் நூழைந்தார். பின்னர், 1989 – 91, 1991-1996, 1996-2001, 2001-2006, 2006 – 2011 என்று ஐந்து முறை சென்னை எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ வாக இருந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் எம்எல்ஏ வாக இருந்தார். 1996 – 2001 திமுக ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தார். பின்னர் 2006 – 2011 ல், அன்றைய திமுக அரசின் செய்தி, விளம்பரத் துறை அமைச்சராகவும், சிம்டிஏ (சென்னை பெருநகர வீட்டு வசதி வளர்ச்சி குழுமம்) வில் முக்கிய பதவியையும் வகித்தார்.

    Parithi Ilamvazhuthis death a great loss to Tamil Nadu

    1986 ல் தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி இருந்தது. அப்போது சட்டமன்றத்தில் திமுக வின் எண்ணிக்கை 22. ஒரு கட்டத்தில் திமுக சட்ட எரிப்பு போராட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்டு சட்டத்தை எறித்தார்கள் என்று 10 திமுக எம்எல்ஏ க்களை அன்றைய தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.எச். பாண்டியன் 'எம்எல்ஏ பதவி நீக்கம்’ செய்தார். இந்த 10 எம்எல்ஏ க்களில் பரிதியும் ஒருவர். ஆனால் பரிதி மின்னலாய் மின்னியது. 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில்தான்.

    [ஆபாசத்துக்கு மாறி வரும் பாசக்கார அரசியல்வாதிகள்!]

    ராஜீவ் காந்தி மே மாதம் 1991 ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அதனால் தேர்தல்கள் 1991 மே மாதத்திற்கு பதிலாக ஜூன் மாதம் நடந்தது. இரண்டு எம்எல்ஏ க்களை மட்டுமே திமுக பெற்றது. ஒன்று துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் பரிதி யும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற உடனேயே கருணாநிதி தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின்னர் நடந்த இடைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வின் செல்வராஜ் வெற்றி பெற்று எம்எல்ஏ வானார். ஆனால் செல்வராஜ் 1993 ல் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்று விட்டார். இதனால் திமுக வின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் ஒன்றாக குறைந்தது. ஒரே உறுப்பினராக இருந்ததால், 1991 – 93 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருந்த பரிதி, செல்வராஜின் கட்சி தாவலால் முதல் வரிசைக்கு வந்தார். அதாவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இருக்கைக்கு நேரெதிர் வரிசையில், சற்று தள்ளி உட்கார்ந்தார்.

    இந்த கட்டுரையாளர் நான்காண்டுகள் அந்த சட்டமன்றத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்தார். திமுகவின் ஒரே உறுப்பினராக இருந்தாலும் பரிதியின் செயற்பாடுகள் அசாத்தியமானதாகத்தான் இருந்தது. எதிர்கட்சிகள் எதை பேசினாலும் அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் புண்ணிய காரியத்தை அன்றைய ஆளும் கட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி புதிய, புதிய உத்திகள் மூலம் தான் சொல்ல வந்ததை பரிதி எப்படியும் சொல்லி, அவை குறிப்பில் பதிவு செய்து விடுவார். இப்போது திமுக வில் இருக்கும் சேடப்பட்டி முத்தையா தான் அப்போது சபாநாயகர். 1991 – 93 வரையில் துணை சபாநாயகராக இருந்தவர் பொன்னுச்சாமி. பின்னர், 93 ல் பொன்னுசாமியை கல்வித்துறை அமைச்சராக மாற்றி விட்டு, புதிய துணை சபாநாயகராக வந்தவர் அஇஅதிமுக வின் வேடச்சந்தூர் காந்திராஜன்.

    புதிய சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் நியமிக்கப்படும் பொழுது அனைத்து கட்சி எம்எல்ஏ க்கள் புதியவரை பாராட்டி பேசுவர். அப்போது பரிதியும் பேசினார். அவர் பேசுவதை எப்படியாவது அவைக் குறிப்பில் இருந்து நீக்க ஆளுந் தரப்பு துடித்துக் கொண்டிருந்தது. அதற்கு வாய்ப்பே தராமல், மிக, மிக, நாசுக்காக, ஆனால் அதே நேரத்தில் மறைமுக குத்தலான வார்த்தைகளால் புதிய துணை சபாநாயகரை பாராட்டி பேசிக் கொண்டிருந்தார். கடைசியாக பேச்சை முடிக்கும் பொழுது, பரிதி இப்படி பேசினார்; '’ஏற்கனவே இந்த அவை ஒரு அழகான (?) சபாநாயகரை பெற்றிருக்கிறது. அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் புதிய சபாநாயகர் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார். அப்போது தன்னுடைய இருக்கையில் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நெளிந்து கொண்டிருந்தார். இது போல் எத்தனையோ விஷயங்களை சொல்ல முடியும்.

    ஒரு முறை எப்படியாவது பரிதியை அஇஅதிமுக பக்கம் இழுத்து விட வேண்டும் என்று அஇஅதிமுக முயன்றது. இதற்கு அவர்கள் அப்போது தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவரை பயன்படுத்தினார்கள். பரிதி அதனை வெட்ட வெளிச்சமாக்க முடிவு செய்து, ஒரு முறை தனியாக அந்த அதிகாரியிடம் பேசினார். பின்னர் அவரை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தார். அந்த அதிகாரி வந்த இரண்டு நிமிடங்களில், பரிதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்திருந்த சுமார் ஆறு பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப் படக்காரர்களை தன்னுடைய வீட்டுக்கள் இருந்த மற்றோர் அறையிலிருந்து வெளியே அழைத்தார். அவ்வளவுதான்… ஓட்டம் பிடித்தார் அந்த அதிகாரி. பின்னர் அந்த அதிகாரி அந்த துறையிலிருந்தே மாற்றப்பட்டு, ஒரு டம்மி பதவிக்கு அன்றைய ஜெயலலிதா அரசால் மாற்றப்பட்டார்.

    1995 ல் ஒரு முறை, இந்த கட்டுரையாளரிடம் நீண்ட நேரம் பரிதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது இந்த கட்டுரையாளர் அவரிடம், 'இந்த அளவுக்கு சாமர்த்தியமாக நீங்கள் ஒரு தனி நபராக எப்படி நான்காண்டுகளுக்கும் மேலாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ஒரு வித சலிப்பு உங்களுக்கு வரவில்லையா? ஏனெனில் நீங்கள் ஒற்றை எம்எல்ஏ வாக எப்படி இந்த ஆளுங் கட்சியை சமாளித்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பரிதி இளம்வழுதி சொன்ன பதில் இந்த கட்டுரையாளரின் நினைவில் என்றும் பதிந்திருக்கும். பரிதி சொன்னார், '’விஷயம் ரொம்ப சிம்பிள். ஒரு நொடியே வாழ்ந்தாலும், கோடி மின்னலாய் மின்ன வேண்டும். என்ற பாரதியார் சொன்ன கவிதை வரிகள்தான் காரணம்’’ என்றார்.

    2011 தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஓரங்கட்டப் பட்ட பரிதி 2013 ல் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அஇஅதிமுக வில் சேர்ந்தார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அமமுக) சேர்ந்தார். சொற்ப காலமே ஆயினும், 'கோடி மின்னலாய் மின்னிய’ பரிதியின் மரணம், தமிழகத்துக்கு நிச்சயம் இழப்புதான்!

    English summary
    Parithi Ilamvazhuthi has left a void in the Political arena through his sudden demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X