சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்.. சேவை தொடங்கியதுமே பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் பல்வேறு வழித்தடங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை - நாகர்கோவில்: தற்போது நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் விரும்பி பயணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர ரயிலாக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வந்தே பாரத்: ரயில் எண். 06067/06068 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் என வாரம் 4 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
பயணிகள் நிம்மதி: மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
கட்டணம் மட்டும் கூடுதல்: சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் ஏசி சேர் காரில் 1,605 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,025 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த வந்தே பாரத் ரயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் மதுவரை வரை செல்வதற்கு 858 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலில் 1086 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரண்டு ரயில்களிலும் ஒரே வசதிதான், ஒரே வழித்தடத்தில் தான் பயணம் செய்கின்றன. ஆனால் கட்டணம் மட்டும் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications