பெரியார் அறிவுலக சர்ச்சை: பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு.. புதிய இயக்குநர் நியமனம்!
சென்னை: பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டு, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

சுமார் 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், 1300 பக்க நூல்களுக்கு 1,500 ரூபாய் 2,000 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்திருந்தார். முக்கியமாக, அந்த நூல்கள் அனைத்தும் தவறான தகவல்களோடு, மோசமான முறையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஆளும் தவெக - எதிர்க்கட்சியான திமுக இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. புத்தக கொள்முதல் முறைகேடு கடந்த ஆட்சியில் நடந்தது என தவெகவும், தவெக ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது என்று திமுகவும் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜிவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி, கூடுதல் பொறுப்பாக, பொது நூலகத் துறையின் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், பெரியார் அறிவுலக விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தியிடம் இருந்து கூடுதல் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்.


Click it and Unblock the Notifications
