பத்திரப்பதிவு: சேலம் கோயில் சொத்தை பதிவு செய்ய அனுமதி.. சார் பதிவாளருக்கு முன்ஜாமீன் மறுத்த ஹைகோர்ட்
சென்னை: சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹைகோர்ட்டின் இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோயிலின் நிர்வாக அறங் காவலர் தர்மலிங்கம் என்பவர், மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

கோயில் நிலம்: அந்த புகார் மனுவில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஜெயச்சந்திரன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த போலீசார், சொத்தை பதிவு செய்த சார் - பதிவாளர் செந்தாமரை மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை ஹைகோர்ட்டில் செந்தாமரை மனு தாக்கல் செய்துள்ளார்.
பத்திரப்பதிவு: இந்த மனுவானது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோவில் சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது குறித்தோ, பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ தனக்கு தெரியாது என்று வாதம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ''கோவில் சொத்துக்கள் பதிவுக்கு தடை இருப்பது குறித்து, மனுதாரருக்கு நன்றாகவே தெரியும். அலுவலக உதவியாளர், அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் வேண்டுமென்றே தன்னுடைய உறவினருக்கு, இந்த கோவில் சொத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளார். மனுதாரருக்கு எதிராக, ஏற்கனவே வழக்கு உள்ளது என்பதால், முன்ஜாமீன் அவருக்கு வழங்கக்கூடாது'' என்றார்.
தள்ளுபடி: இந்த இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர், நீதிமன்ற வழக்கு குறித்து அறிந்திருந்தும், வேண்டுமென்றே பத்திரப்பதிவு செய்ய அனுமதி தந்திருக்கிறார்.. அவர் மீது ஏற்கனவே வழக்குகளும் உள்ளன என்று கூறி சார் - பதிவாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications