எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவிக்கு சிக்கல்?.. ஹைகோர்ட்டில் மனு தாக்கல்.. அதிமுகவில் பரபரப்பு..!
ஓபிஎஸ், இபிஎஸ் பதவிகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்ப்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா,கடந்த 2016, டிசம்பரில் உயிரிழந்தார்.. இதையடுத்து நடந்த அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்..
தொடர்ந்து பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார்... பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்... இதன்காரணமாக ஓபிஎஸ் ராஜினாமா செய்திருந்தார்..

சசிகலா
இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனையை விதிக்கப்பட்டதால், அவர் ஆதரவுடன் 2017, பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்... இதற்கு ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக இணைந்தன.. பிறகு துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார்..

பொதுச்செயலாளர்
அத்துடன் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளருக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ள நிலையில், கட்சி விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன... பொதுச்செயலாளருக்கு இருந்த அனைத்து அதிகாரங்களும் இந்த இரு பொறுப்புகளுக்கும் தரப்பட்டன.. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸூம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்...

அங்கீகரிப்பு
அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது.. அன்றிலிருந்து இன்றுவரை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களின் உத்தரவின்பேரில்தான் கட்சி இயங்கி வருகிறது.. இவர்கள் ஒப்புதலுடன்தான் பல்வேறு அறிவிப்புகள், தீர்மானங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.

தீர்மானம்
இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இரு பதவிகள்
அதில் உள்ள விவரம் இதுதான்: "அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். அதற்குப் பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் உருவாக்கப்பட்டன.

பொதுக்குழு
மேலும், பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.

மரணம்
ஆகவே இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடதேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்த மனு வரும் திங்கள் கிழமை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications