அவர் பேரை மாத்திக்கிட்டா எனக்கு சந்தோஷம்.. நாந்தான் லெட்டர் போட்டேன் - போட்டுத் தாக்கிய புகழேந்தி!
சென்னை : ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் காமராஜ் தனது பெயரை மாற்றிக் கொண்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத நகை, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், திமுக ஆட்சி வந்த பின்னும் ஊழல் வழக்கு விசாரணையில் தாமதம் செய்வதாக நான் கடிதம் எழுதியிருந்தேன், அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் வந்தது எனத் தெரிவித்துள்ளார் புகழேந்தி.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

41 லட்சம் பறிமுதல்
ஒரே நேரத்தில் 49 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 963 சவரன் தங்கம், கிலோ கணக்கில் வெள்ளிப் பொருட்கள், ஐபோன், முக்கிய ஆவணங்கள், வங்கி பெட்டக சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் கணக்கில் வராத பணத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நான் தான் கடிதம் எழுதினேன்
இந்நிலையில் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "2017ஆம் ஆண்டே புகார் கொடுத்துவிட்டேன். இந்த மன்னர்கள் ஊழல் தாண்டவம் ஆடிய போதே ஊழல் புகார் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்கப்பட்டது. ரொம்ப நாளாக இந்த வழக்கு பெண்டிங்கில் இருந்தது. ஏனென்றால் கொள்ளையடித்ததே இவர்கள்தான் எனவே ஆட்சி மாற்றம் வந்தபின் விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்தோம். திமுக ஆட்சி வந்த பின்னும் அவர்களும் தாமதம் செய்கிறார்கள் என்று நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் வந்தது.

பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்
அந்த பதில் கடிதத்தில் தீவிரமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்திருந்தனர். நாடும் தெரிந்துகொள்ள வேண்டும், மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜ் என அவர் பெயர் வைத்திருக்கிறார். அந்த பெயரை மாற்றிக் கொண்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

ரெய்டுக்காக பாராட்டுகிறேன்
எம்ஜிஆர் 'என்னுடைய தலைவர்' என்று காமராஜரை கூறியுள்ளார். ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காமராஜர், அண்ணா, ஜெயலலிதா போன்றவர்கள். இங்கு என்ன கொடுமை என்றால் காமராஜர் பெயரை வைத்துக்கொண்டு இவர்கள் இப்படி செய்கிறார்கள். இந்த ரெய்டில் இருந்து தப்பிக்கவே முடியாது. இந்த ரெய்டுக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications