பரபர பனையூர்.. தகித்த தைலாபுரம்! இப்போ என்ன சத்தமேயில்ல! திடீர் அமைதி.. என்னதான் நடக்கிறது பாமகவில்?
சென்னை: கடந்த வாரம் வரை மிகப் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த பாமக விவகாரம் இந்த வாரம் அப்படியே அமைதியாய் இருக்கிறது. ராமதாஸின் வீட்டுக்கு அன்புமணி சென்று வந்ததற்கு பிறகு பேசிய ராமதாஸ், அதற்குப் பிறகு கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார். என்ன நடக்கிறது பாமகவில் என ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கின்றனர் தொண்டர்கள்.
2026 தேர்தலுக்கு தமிழகமே தயாராகி வருகிறது. திமுக, அதிமுக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிவிட்டன. அதே நேரத்தில் பாமகவில் நடக்கும் சலசலப்புகள் தொண்டர்களை சற்றே அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாமகவின் பலத்தை நிரூபிக்க வேண்டுமென மாமல்லபுரத்தில் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு முதன்முறையாக வன்னியர் சங்க மாநாட்டை கூட்டியது பாமக. அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பாமக சர்ச்சை
ஆனால் மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னதாக அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், நானே தலைவராக தொடர்வேன் என கூறிய அதிர வைத்தார் ராமதாஸ். வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ் பேசிய கருத்துக்கள் பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கட்சியின் எதிர்காலம் கருதி அன்புமணியை தலைவராக நியமனம் செய்த ராமதாஸ், அதற்குப் பிறகு தனக்கான முக்கியத்துவம் குறைவதாகவும், அன்புமணி தனித்து செயல்படுவதாக எண்ணி அவரை டார்கெட் செய்வதாக அன்புமணி ஆதரவாளர்கள் கூறினர்.
அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து அன்புமணியின் நடைபயணம், பொதுக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு, கூட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். காவல்துறை, நீதிமன்றத்தை நாடியும் அதற்கு பலனளிக்கவில்லை. இதற்கிடையே தனது தரப்பு பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி அடுத்த ஆண்டு வரை தானே தலைவராக தொடர்வேன் என தீர்மானம் நிறைவேற்றி அதனை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி அது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ராமதாஸ் தலைவர்
அதற்கு பிறகு பாமக விவகாரம் அப்படியே ஓய்ந்து போனது. இடையே ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு அன்புமணி ராமதாஸ் குடும்பத்தோடு தைலாபுரம் சென்றார். அங்கு இரு தரப்பும் கேக் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதற்குப் பிறகு தேசிய ராமதாஸ் இது சாதாரண சந்திப்பு தான் எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் அன்புமணி தரப்பு டெல்லிக்கு காய் நகர்த்தியின் நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு பச்சை கொடி காட்டியதாக சொல்லப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என சொல்லப்படுகிறது.
பாமக அரசியல்
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராமதாஸ் செய்தி அவர்களை சந்தித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இருதரப்பிலும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாகவும் அன்புமணி நடை பயணம் முடியும் வரை ராமதாஸ் அறிக்கை அல்லது பேட்டியெதுவும் கொடுக்க வேண்டாம் என குடும்பத்தினரே வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
சமாதானம்
அதனால் தான் ராமதாஸ் தரப்பு அமைதியாக இருக்கிறது என்கின்றனர் அவரது தரப்பினர். அதே நேரத்தில் வழக்கம் போல் அன்புமணி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்துக்கு தயாராகிவிட்டார். கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசுவதால் சட்டமன்றத் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இரு தரப்புமே அமைதியாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும், எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எத்தனை நாள் இன்று அமைதி நீடிக்கும் என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications