எம்ஜிஆர் வியந்த வன்னியர் வலிமையும், வழங்க முன்வந்த 13% இட ஒதுக்கீடும்! - ராமதாஸ் சொன்ன ப்ளாஷ்பேக்..!
சென்னை: வன்னியர்களின் வலிமை என்ன? அவர்கள் என் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களிடம் எனக்கு உள்ள செல்வாக்கு என்ன? என்பதையெல்லாம் அறிந்து எம்ஜிஆர் வியந்துள்ளார் என ப்ளாஷ்பேக் நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்..
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வன்னியர் இட ஒதுக்கீடு கோரி ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்ட போதும், 21 மாவீரர்கள் துபாக்கிகளால் சுட்டும், அடித்தும் கொல்லப்பட்ட போது தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் இல்லை.

மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். தமிழகம் திரும்பியவுடன் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் தொடர்பாக 93 சங்கங்களின் பிரதிநிதிகளை 25.11.1987-ஆம் நாள் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார்.
வன்னியர் சங்கத்தின் சார்பில் என்னுடன் வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம், பேராசிரியர் தீரன்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில், வன்னியர்களின் சமூக, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது? என்பது குறித்தும், வன்னியர்களுக்கு எதற்காக 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கிப் பேசினேன்.
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் மட்டுமல்ல.... தமிழக அரசுக்கு வரி செலுத்துவதிலும் வன்னியர்கள் தான் முதன்மை சமுதாயம் ஆவர். சொத்துவரி, நிலவரி உள்ளிட்ட அனைத்து வகையான வரிகளையும் நாங்கள் தவறாமல் செலுத்துகிறோம். வெற்றிலைப் பாக்கு, பீடி, சிகரெட், உணவுப் பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் மூலமாகவும் நாங்கள் செலுத்தும் வரி தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இப்படியாக நேரடி வரியாக இருந்தாலும், மறைமுக வரியாக இருந்தாலும் நாங்கள் முறையாக செலுத்துகிறோம். ஆனால், எங்கள் சமுதாயம் சமூகரீதியாவும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. பொருளாதார நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் எவரும் பெருநிழக்கிழார்கள் அல்ல. எங்களில் எவரிடமும் 100 ஏக்கர், 200 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் சிறிய அளவில் நிலம் வைத்துள்ள உழவர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தான். இத்தகைய நிலையில் உள்ள சமுதாயத்தை முன்னேற்ற வேண்டுமானால் அதற்கு கல்வியும், அரசு வேலைவாய்ப்பும் கட்டாயம் தேவை. ஆனால், தமிழக அரசின் வேலைவாய்ப்பும், கல்வியும் எங்களுக்கு கிடைப்பதே இல்லை.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னியர்களுக்கு ஒர் விழுக்காடு கூட கிடைப்பதில்லை. வன்னியர்கள் தான் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரும்பான்மை சமுதாயம். ஆனால், ஒரு விழுக்காடு தான் இட ஒதுக்கீடு கிடைக்கிறது. தமிழக அரசின் பல துறைகளின் வேலைவாய்ப்பில் எங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை.மருத்துவப் படிப்பில் அதுகூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 500 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஆனால், வன்னியர் சமுதாயத்தினருக்கு வெறும் 3 இடங்கள் மட்டும் தான் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் வன்னியர்கள் தான் பெரும்பான்மை சமுதாயம். ஆனால், அங்குள்ள வன்னிய மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என்று ஆவேசமாக பேசினேன். முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், மூத்த அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நான் பேசி முடித்தவுடன் அமைச்சர்களை எம்.ஜி.ஆர் கோபமாக பார்த்தார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சரளமாக பேச முடியவில்லை. ஆனாலும், இதல்லாம் என்கிட்ட ஏன் சொல்லலை என்று திக்கித் தடுமாறிக் கேட்டார். அதற்கு அமைச்சர்களிடமிருந்து பதில் இல்லை.
வன்னியர் சங்க சாலைமறியல் போராட்டத்திற்கு எதிராக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட அமைச்சர்கள் குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கூறினோம். எங்களின் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களால் மறுக்க முடியவில்லை. பதில் கூற முடியாமல் தடுமாறினார்கள். அதேபோல், காவல்துறை தலைவர் ஸ்ரீபாலும், அவரது காவலர்களும் செய்த அட்டூழியங்களையும் பட்டியலிட்டோம். வன்னியர்கள் மீது பொய் வழக்கு போடுவது அப்போதும் தொடர்வதாகக் கூறிய நான், அதே நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்தேன்.
தமிழக அரசுடன் பேச்சு நடத்துவதற்காக திண்டிவனத்திலிருந்து கிளம்பிய போது, என்னுடன் பலர் சென்னைக்கு வரத் தயாராயினர். ஆனால், எவரும் சென்னை வர வேண்டாம் என்று தடுத்து விட்டேன். ஆனாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தலைமைச் செயலகத்தில் குவிந்திருந்தனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள்மயமாக காட்சியளித்தது. ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் கைகளிலும் மஞ்சள் கொடிகள் இருந்தன. வன்னியர்களின் வலிமை என்ன? அவர்கள் என் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களிடம் எனக்கு உள்ள செல்வாக்கு என்ன? என்பதையெல்லாம் அந்த ஒரு நிகழ்வில் அறிந்து எம்ஜிஆர் வியந்துள்ளார்.
ஆனால், வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்ததைப் போல, எங்களுடன் பேச்சு நடத்தி ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே, அதாவது 1987&ஆம் ஆண்டு திசம்பர் 24&ஆம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் காலமானார். அதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 13% தனி இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, அதற்கான கோப்புகளை எம்.ஜி.ஆர் தயாரித்து வைத்திருந்தார். அவர் மட்டும் இன்னும் சில வாரங்கள் உயிருடன் இருந்திருந்தால் நமக்கு 13% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக எம்.ஜி.ஆர் மறைந்து விட்ட நிலையில், அதன்பின் சட்டத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ஒருவர் அந்த கோப்புகளை அழித்து விட்டதாகவும் தெரியவந்தது. எம்.ஜி.ஆர் நமது கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தாலும், இயற்கையின் சதியால் அப்போது நமக்கு சமூகநீதி கிடைக்கவில்லை." என கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications