ஒரே குரலாய் பேசிய திமுக அதிமுக.. ஆமோதித்த பாஜக.. நகர்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், மாநிலம் முழுவதும் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான மக்கள் பிரநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் நிர்வாகிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கொரோனாவால் தேர்தல் நடைபெறுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஆலோசனை
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உடைய பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக , அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

ஒரே கட்டமாக தேர்தல்
இந்த கூட்டத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பொள்ளாட்சி ஜெயராமன், அதிமுக சார்பில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வலியுறுத்தப்பட்டதாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறினார். மேலும் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடிய குளறுபடிகள் ஆதாரத்தோடு தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளதாக கூறிய அவர், ஒரு வார்டில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வேறு வார்டிற்கு மாற்றியுள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கட்சிகள் வலியுறுத்தல்
தொடர்ந்து திமுக சார்பில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிரிராஜன் கூறும்போது, 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடைப்பெற்றதோ அதே போன்று இந்தத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார். மேலும் நேர்மையாக நியாயமாக தேர்தல் நடைபெற திமுக ஒத்துழைக்கும் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன் கூறுகையில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்,கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.