அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
சென்னை: ஒருவழியாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடித்து வந்த அரசியல் புயல் ஓய்ந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் தலைவர்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்தில் தேர்தல் களமானது கோடை வெயிலுக்கு இணையாக சூடானது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே கடந்த சில நாட்களாக மிகுந்த பணிச் சுமைக்கு ஆளானார்கள் என்று கூட சொல்லலாம்..
வாக்குப் பதிவு நிறைவு: இந்நிலையில் பதினெட்டாவது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்போடு வைக்கப்பட்டிருக்கின்றன.
தீவிர பிரச்சாரம்: இன்னும் ஆறு கட்ட தேர்தல் மீதம் இருக்கும் நிலையில் ஜூன் - 1ஆம் தேதி இறுதிக் கட்ட வாக்குப் பதிவும், அதன்பின் ஜூன் 4-ம் தேதி வாக்கு இயந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு திரட்டினர்.
ஓரு மாதம் கடும் பணி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அதிமுக பொது செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முன்னணி அரசியல் தலைவர்களும் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் அமைச்சர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 30 நாட்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
ஓய்வெடுக்க திட்டம்: இந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் 45 நாட்கள் வாக்கு எண்ணிக்கைக்கு கால அவகாசம் இருக்கிறது. இதை அடுத்து தலைவர்கள் பலரும் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் கோடை வாசஸ்தலங்களில் சிறிது காலம் தங்கவுள்ளனர். வழக்கமாகவே தேர்தல் நேரங்களில் பிரச்சாரத்திற்கு பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வெடுக்க திட்டமிடும் முதல் பட்டியலில் நீலகிரி கொடைக்கானல் ஆகியவை இருக்கின்றன.
சுற்றுலாப் பயணம்: தமிழக முதல்வர் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை பலரும் தமிழகத்திற்கு உள்ளேயே தேர்ந்தெடுக்கும் சுற்றுலாத்தலங்கள் இவைதான். அதுமட்டுமில்லாமல் இமாச்சல பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இருந்தாலும் அங்கெல்லாம் தேர்தல் காரணமாக சுற்றுலா செல்வது சற்றே ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில முக்கிய தலைவர்கள் ஸ்விட்சர்லாந்து லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications