பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு முட்டை.. தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு!
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி முட்டை என நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகின்றன.
மத்திய அரசின் பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கி அறிவிப்புகள் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தான் பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, அதில் பாஜக - அதிமுக மத்திய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி "முட்டை" (0) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 'ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்னும் தலைப்பில் நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் ஒட்டியுள்ள போஸ்டர்களில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை, தமிழ்நாட்டின் குடிநீர் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.3 ஆயிரத்து 112 கோடி நிதி வழங்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி இல்லை. மாநிலங்களுக்கு 50 சதவீதம் பகிர்வை மாநில அரசு வலியுறுத்தியும், அதற்கான அறிவிப்பு இல்லை. எந்த வரிச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எவ்வித அறிவிப்பும் இல்லை.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பின்னடைவை போக்க எவ்வித திட்டமும் இல்லை என பல அம்சங்களை தெரிவித்துள்ள அந்த போஸ்டரில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே குறிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நெல்லை மக்களே சிந்திப்பீர்' என அந்த போஸ்டர்களில் எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications