என் கூட நடிக்கவே பயப்படுறாங்க.. சினிமா கேரியர் பாதிக்குது.. காரணம் இதான்! பிரகாஷ்ராஜ் ஓப்பன் டாக்!
சென்னை : நான் அரசியலில் தீவிரம் காட்டி வருவதால், ஒருகாலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிக்க பயப்படுகின்றனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார் பிரகாஷ் ராஜ். குறிப்பாக, பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தனது தீவிர அரசியல் பேச்சுகளால், சினிமாவில் தான் விளைவுகளைச் சந்திப்பதாகவும், பல நடிகர்கள், டெக்னீஷியன்கள் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் அரசியல்
தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் பிரகாஷ்ராஜ் அண்மைக்காலமாக அரசியல் குறித்து துணிச்சலாகப் பேசி வருகிறார். குறிப்பாக அவர் பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார். தொடர்ந்து, பாஜக அரசையும், மக்கள் விரோத திட்டங்களையும் விமர்சித்து ட்விட்டரில் பேசி வருகிறார் பிரகாஷ்ராஜ்.

பிரஜாஷ் ராஜ் பேட்டி
இந்நிலையில், சமீபகாலமாக பிரகாஷ் ராஜ் சினிமாவில் நடிப்பது குறைந்துள்ளது. நான் தீவிரமாக பாஜகவை எதிர்த்து அரசியல் பேசுவதால் என்னுடன் சக நடிகர்கள் பேசுவதற்கும், உடன் நடிப்பதற்கும் பயப்படுகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பயப்படுறாங்க
எனது அரசியல் கருத்துகளால் பல நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. அந்த பயத்தில்தான் என்னை விட்டு அவர்கள் விலகுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு எதிராகப் பேசுவது அந்த கலைஞர்களை பாதிக்கும் என்பதால் அவர்களை நான் குறை சொல்லவும் இல்லை.

வசதி, வலிமை இருக்கு
எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது என்பதற்காக அரசியலைத் தூக்கி வீசிவிட முடியாது. வேண்டுமென்றால் எனது பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது. இப்போது நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன்.

நல்ல மனிதன்
ஏனென்றால் நான் என் குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால், என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகனாக மட்டுமே அறியப்பட்டிருப்பேன். ஆனால் நான் மறைந்த பிறகும் நல்ல மனிதனாகவும் பிரகாஷ்ராஜ் இருந்தான் எனச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications