கல்லூரி காதலால் கர்ப்பம்! ரயில் முன் காதலன்.. விபரீத முடிவெடுத்த காதலி! 8 மாசம் கர்ப்பம் வேற.. சோகம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சோகத்தில் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கர்ப்பமாக இருந்ததும் அவரது வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருக்கும் பெரியங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்திலன் ராகுல். தற்போது பெங்களூரில் வசிக்கும் அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாரணி என்ற மாணவியும் அதே கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. தாரணியும் நித்திலன் ராகுலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். தொடர்ந்து இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இருவரும் பெங்களூரின் பல இடங்களுக்குச் சென்று காதல் வளர்த்த நிலையில் நெருங்கி பழகியதால் தாரணி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல தாரணியின் வயிற்றில் இருந்த கரு வளர்ந்துள்ளது. தொடர்ந்து 8 மாத கர்ப்பிணியாக இருந்த தாரணியை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் இது தொடர்பாக பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் என கூறி இருக்கின்றனர். தொடர்ந்து நித்திலன் ராகுல் பெரியங்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற நிலையில், தாரணி வாணியம்பாடியில் இருக்கும் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இந்த வயதில் உனக்கு இது தேவையா என நித்திலன் ராகுலை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனம் உடைந்த ராகுல் வீட்டில் செல்போன் உள்ளிட்டவற்றை வைத்து விட்டு பெரியங்குப்பம் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் நித்திலன் ராகுலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நித்திலன் ராகுல் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தாரணியும் வாணியம்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார் .இதை அடுத்து அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தாரணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவனும் கல்லூரி மாணவியும் விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் இருவரது உடலையும் பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. மேலும் ஒரு பாவமும் அறியா சிசுவும் தாயோடு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..












Click it and Unblock the Notifications