பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை மறக்கவே முடியல.. எங்க போனாலும் நம்மள பத்திதான் பேச்சு: சீண்டிய ஸ்டாலின்
சென்னை: எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார் பிரதமர் மோடி, பிரதமரால் தமிழ்நாட்டை மறக்கவே முடியவில்லை என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசியுள்ளார். தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
திமுக அரசை விமர்சித்த பிரதமர் மோடி: அண்மையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது என்றும், கோயில் சொத்துகளையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் பேசினார் மோடி.

மேலும், இந்து கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசு, சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைப்பதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.
ஸ்டாலின் காட்டம்: பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெற்ற வள்ளலார் 200 நிறைவு விழாவில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பிரதேசம், அந்தமான், தெலுங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார் மோடி. பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என விமர்சித்துப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது" என்று பகிரங்கமாக பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
பிரதமரால் மறக்க முடியாத மாநிலம்: பிரதமருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? எதைத் தவறு என்கிறார் பிரதமர் ? பிரதமர் பார்வையில் தான் தவறு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா? 2 ஆண்டுகளில் ரூ.3,50 கோடி மதிப்பிலான கோயில்கள் மீட்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம், அந்தமான், தெலங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார். பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? தர்மமா? பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது சரியா?" என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஏற்கனவே, மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்று பாஜக கூட்டத்தில் பங்கேற்றபோது, திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலன் அடைவார்கள். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் மோடி விமர்சித்தார். அதேபோல, கடந்த ஜூலை மாதம் அந்தமான் சென்றபோது தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்த போதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன எனப் பேசியிருந்தார். இவற்றைச் சுட்டிக்காட்டியே இன்று பிரதமரால் எங்கு சென்றாலும் திமுகவை மறக்க முடியவில்லை எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications