நேரடியாக தலையிடும் ராகுல்.. திமுக அல்லது தவெக கூட்டணி? காங்கிரஸ் முடிவு தான் என்ன! முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பிடிக்கும் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் தொடருமா அல்லது தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பது விவாதமாகவே வெடித்துள்ளது. இந்தச் சூழலில் தேர்தல் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நாளை ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு கூட சில வாரங்களில் வந்துவிடும் என்றே தெரிகிறது. இதனால் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் அதிமுக தனது கூட்டணியில் பெரிய கட்சிகளை இணைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

திமுக கூட்டணி
மறுபுறம் திமுக கூட்டணியிலும் திடீரென இப்போது சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. விஜய்யின் தவெக கட்சியுடன் இந்த முறை கூட்டணியை அமைக்கச் சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதாகவும் அதற்கான லாபி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிகிறது.
ஆலோசனை
முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளடக்கிய 5 பேர் கொண்ட குழு ஒன்று தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டது. இந்த திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அப்போது எதுவும் இறுதியாகவில்லை.
காங்கிரஸ் திட்டம் என்ன
அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் தவெக உடன் கூட்டணி அமைக்கவே தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆட்சியில் பங்கு என்பதை விஜய் அறிவித்துள்ளதால்.. அந்தக் கூட்டணிக்குச் செல்ல ஒரு தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக வெளிப்படையாகவே சில தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். திமுக மீது தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் தனது கூட்டணியில் தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறது. அதேநேரம் கூட்டாட்சி என்பதிலும் உடன்படி திமுக ரெடியாக இல்லை. இதனால் கடைசி நேரத்தில் சற்று அதிக சீட்களை கொடுத்துவிட்டு, கூட்டணி ஆட்சி என்பதைக் கைவிடச் சொல்லி காங்கிரஸிடம் திமுக கேட்கும் என்றே தெரிகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணி
தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணி தமிழக அரசியலில் வெற்றிக் கூட்டணியாகவே இருக்கிறது. 2019 லோக்சபா தேர்தல் முதலே பல தேர்தல்களில் இந்தக் கூட்டணி வென்றே வந்துள்ளது. அதேநேரம் விஜய் தரப்பின் முதல் தேர்தல் என்பதால் எப்படிப் போகும் என்பது தெரியாது. ஆனால், கூட்டாட்சி என்பது காங்கிரஸ் மாநிலத்தில் வளர உதவும். இதனால் காங்கிரஸ் என்ன முடிவை எடுக்கும் என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
நாளை ஆலோசனை
இந்தச் சூழலில் தேர்தல் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நாளை ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி செல்வதாகவும் தெரிகிறது. கூட்டணி குறித்து நாளை நடக்கும் ஆலோசனையில், கூட்டணி மாறுவது சரியாக இருக்குமா.. ஒருவேளை திமுக கூட்டணியில் தொடர்ந்தால் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications