பாமக ராமதாஸ் அணிக்கு 3 தொகுதிகள்.. டீலை முடித்த எவ வேலு.. திருமாவளவன் ஒப்புக்கொள்வாரா?
சென்னை: பாமகவின் ராமதாஸ் அணிக்கு திமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ராமதாஸ் அணியுடனான டீலை அமைச்சர் எவ வேலு முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திமுக கூட்டணிக்குள் பாமக ராமதாஸ் அணி வருவதை திருமாவளவனின் முடிவை பொறுத்தே எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பாமக இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதில் பாமக அன்புமணி தரப்பில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தது. ஆனால் ராமதாஸ் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியோ அல்லது அன்புமணியோ பதில் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அன்புமணி தரப்பில் பாமகவின் மாம்பழ சின்னத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.

இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்து வருகிறார். அதேபோல் அன்புமணி இருக்கும் கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாமகவின் ராமதாஸ் அணியை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் திமுகவும் ஆர்வம் காட்டி வருகிறது. வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கு வங்கியை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டு வருகிறது. அதேபோல் ராமதாஸ் மூலமாக அதிமுகவின் வாக்கு வங்கியிலும் ஓட்டை போட முடியும்.
இதனை கணக்கிட்டு பாமக ராமதாஸ் அணிக்கு 3 தொகுதிகள் வரை தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முன் வந்துள்ளது. இதனை ராமதாஸ் அணி ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாமக ராமதாஸ் அணியை விசிக தலைவர் திருமாவளவன் ஏற்பாரா என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய கேள்வியாகும். திருமாவளவன் ஏற்றால் மட்டுமே, ராமதாஸ் அணியுடன் கூட்டணி என்ற முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பக்கம் 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் விசிக தெளிவாக இருக்கிறது. பாமக, பாஜக இருக்கும் அணியில் விசிக இணையாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் விசிகவுக்கு இரட்டை இலக்கில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால், ராமதாஸ் அணியை சேர்ப்பதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் திமுக நிர்வாகிகள் திருமாவளவனிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர். இதனால் இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications