ராணிப்பேட்டை சர்வேயர் சித்ரா.. அசிங்கப்பட்ட விஏஓ.. பட்டா மாறுதல், நில அளவீடில் அரசு அதிகாரிகள் பரபர
சென்னை: லஞ்ச பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர்.. இதில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடக்கம்.. பொதுவெளியிலேயே லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு சிக்கி கொள்ளும் பெண் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.. இந்நிலையில், தமிழக அரசு துறையில் தாண்டவமாடும் லஞ்ச லாவண்யங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி, அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

தாசில்தார், தலையாரி
அதில், "கடந்த 5 வருடங்களில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் கைதாகி உள்ளனர். மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை, 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக, கிளார்க் முதல் கிராம பஞ்சாயத்து உதவியாளர் வரை, 32 பேர் கைதாகி உள்ளனர். 4வது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது.
நில அளவீடு - சர்வேயர்
நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார் - பதிவாளர், உதவியாளர் என, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், காவல் துறையில் 3 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று வெளியாகியிருந்தது.
அரசாங்க பணியில் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது, தமிழக மக்களை கவலை கொள்ள செய்தது. எனினும், சில அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் குறையவில்லை. நேற்றுகூட ஒரே நாளில் சேலம், ராணிப்பேட்டையில் 2 அதிகாரிகள் கைதாகி உள்ளனர்.
விஏஓ அரசு ஊழியர்கள்
சேலம் ஆத்தூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மகேந்திரன் என்பவர், தன்னுடைய வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.. அப்போது நிலத்தை அளவீடு செய்ய ரூ.25000 வேண்டும் என்று விஏஓ ராமசாமி கேட்டாராம். இதைக்கேட்டு அதிர்ந்த மகேந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுரைப்படி, விஏஓ ராமசாமியிடம் ரூ.25 ஆயிரத்தை மகேந்திரன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராமசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்போது 51 வயதான விஏஓ ராமசாமி ஜெயிலில் உள்ளார்.
ராணிப்பேட்டை - பட்டா மாறுதல்
அதேபோல, ராணிப்பேட்டை அம்மூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்.. 53 வயதான இவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.. இவரது மனைவி பூங்கொடி. இவரது அப்பா, பூங்கொடி உட்பட தன்னுடைய 4 மகள்களுக்கும் சேர்த்து சொத்தினை பாகப்பிரிவினை செய்துள்ளார். இந்த சொத்துக்களை 4 பேருக்கும் தனித்தனியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைனில் கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் தன்னுடைய மனு மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், நேரடியாகவே வாலாஜா தாலுகா ஆபீசுக்கு சென்று, சர்வேயர் சித்ராவை அணுகி இதுகுறித்து கேட்டுள்ளார்.. அதற்கு சித்ரா, 37,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டாராம். சொந்த நிலத்திற்கு எதுக்காக லஞ்சம் தரவேண்டும் என்று நினைத்த கார்த்திகேயன், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
தாலுகா ஆபீசில் சித்ரா
போலீசார் அறிவுரையின்படி, சித்ராவிடம் தாலுகா ஆபீஸிலேயே பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சித்ராவை கைது செய்தனர்.
அரசு பணியில் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் வருவாய் துறை முன்னிலையில் உள்ளபோது, சர்வேயர்களும், விஏஓக்களும் அதிலும் பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாவது, பெருத்த வேதனையையும், கவலையையும் மக்களுக்கு உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications