நாட்டில் 96 சதவீத இந்துக்கள் படிக்க அருட்தந்தையர்கள் தான் காரணம்: சபாநாயகர் அப்பாவு பேச்சு
சென்னை: இந்தியாவில் 200 வருடங்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரிகள் இருந்தன. ஆனால் 4 சதவீதம் பேர் மட்டுமே படிக்க முடிந்தது. ஏனைய 96 சதவீதம் இந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள் தான் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசினார்.
இந்தியாவில் 96 சதவீத இந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர் மற்றும் அருட் சகோதர சகோதரிகள் தான் என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் கருணாநிதி கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 'சட்டசபை நாயகர் கலைஞர்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 119 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 100 பட்டதாரிகள் இருந்தால் அதில் 94 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். மீதி 6 சதவீதம் மட்டுமே பிற சமூகத்தினராக இருந்தனர். அந்த நிலையில், இருந்து எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என பார்க்க வேண்டியது அவசியம். நீதிக்கட்சி முதலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொண்டு வந்தது. கலைஞர் கருணாநிதி ஆற்றிய பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் படிக்க சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்று தந்தார். திருமண உதவி தொகை திட்டத்தை கொண்டு வந்து பெண்கள் படிக்க உதவி செய்தார். இந்தியாவில் பட்டம் படித்த பெண்களின் சராசரி 26 % என்றால் தமிழ்நாட்டில் மட்டும் சராசரி 78 சதவிகிதமாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். கலைஞர் கருணாநிதி செய்த சாதனையாகும்.
இந்தியாவில் 200 வருடங்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரிகள் இருந்தன. ஆனால் 4 சதவீதம் பேர் மட்டுமே படிக்க முடிந்தது. ஏனைய 96 சதவீதம் இந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர் , அருட்சகோதரிகள் , சகோதரர்கள் தான். கிறிஸ்தவ மத போதர்கள்தான் பள்ளிகளை ஆரம்பித்ததோடு சாதி, மதம் இல்லை அனைவரும் கல்வி கற்க வாருங்கள் என்றார்கள். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு இத்தகைய வளர்ச்சி அடைந்தது. அதை முதல் புள்ளியாக எடுத்துக் கொண்டு திராவிட இயக்கங்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றன" என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.












Click it and Unblock the Notifications