27% இடஒதுக்கீடு:ஸ்டாலினுக்கு மு.லீக், ஆர்ஜேடி, திரிணாமுல் காங்., ஆந்திரா-மகா. அமைச்சர்கள் பாராட்டு!
சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டை நிலைநாட்டிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரிய ஜனதா தள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்; ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஏ.ஐ.பி.சி.எப், எஸ்.ஆர்.ஏ உள்ளிட்ட பல அமைப்புகள் 27% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் சமூக நீதிக்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டம் (2022-2024) என்ற தலைப்பில் இன்று இணையவழி கருத்தரங்கை நடத்தின. இக்கருத்தரங்கில் பேசப்பட்டவை:
முகமது பஷீர் (இ.யூ.மு.லீ): மு.க. ஸ்டாலினும் திமு கழகமும் மிகப் பெரும் பங்களிப்பை இந்த இட ஒதுக்கீட்டுக்காக வழங்கியுள்ளார்கள். இந்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான ஆற்றலும் திறமையும் வாய்ந்த தலைவராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என எந்தத் தயக்கமுமின்றி என்னால் கூற முடியும். சமூகநீதியைப் பொறுத்தவரை மு.க. ஸ்டாலினை ஒரு icon என்றே அழைக்கலாம்.

ஆர்ஜேடி, திரிணாமுல்
மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரிய ஜனதா தள்): திராவிடர் இயக்கம் பீகாரில் எங்களுக்கு மிகப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமூகநீதிக்காக நாங்கள் குரல் எழுப்பும்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் எங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவை வழங்கியது. டெரெக் ஓ பிரையன் (திரிணாமூல் காங்கிரஸ்): மு.க. ஸ்டாலினுக்கும் அவரது தலைமையிலான அணிக்கும் எனது பாராட்டுகள். நீங்கள் செய்திருப்பது சாதாரணமான, எளிய பணி அல்ல. நாம் தொடர்ந்து இத்தகைய பணிகளை இணைந்து மேற்கொள்வோம்.

ஆந்திரா அமைச்சர்
ஆதிமுலப்பு சுரேஷ் (ஆந்திரா கல்வித் துறை அமைச்சர்): பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பணிகள், சீர்திருத்தங்கள், முன்னெடுத்துள்ள திட்டங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நாயகனாக அவர் உயர்ந்துள்ளார். உயர்ந்த மனிதர்கள் ஒரேமாதிரி சிந்திப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகனும் ஏழை, எளிய குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மகா. அமைச்சர்
சகன் புஜ்பல் (மகாராஷ்டிர உணவுத்துறை அமைச்சர்): நீங்கள் தொடர்ந்து இந்த ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினீர்கள். பூலே, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உங்கள் தந்தை கருணாநிதி போன்றோர் தங்கள் வாழ்நாளையே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தார்கள். எங்கள் அனைவருக்கும், நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீங்கள்தான் நம்பிக்கைக் கீற்று. நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். கடவுள் உங்களுக்கு வலிமையை வழங்க வேண்டும்.

பீகார் தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ் (பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்): திமுகவும் ராஷ்டிரிய ஜனதா தளமும்; கருணாநிதியும் லாலு பிரசாத்தும் கர்ப்புரி தாகுரும் லோகியாயும் சமூகப் பார்வையைக் கொண்டவர்கள். நீதிமன்றத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தைக் கொண்டு நியாயத்தைப் பெற்றுத் தந்துள்ள ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு எங்களது சிறப்பான நன்றிகள். ஆனால் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் மிக முக்கியம். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவதால் நாங்கள் ஜாதியவாதிகள் என்று நினைக்கவேண்டாம். நாங்கள் சமத்துவவாதிகள். மண்டல் கமிசனின் பயன் நமக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் சாலைக்கு வந்து போராட வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தெற்கில் ஸ்டாலின் போராடி வருகிறார்கள். வடக்கில் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதை நாம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஸ்டாலின் முயற்சிகளுக்கு எங்கள் பாராட்டுகள். அவருக்கு நாங்கள் துணைநிற்போம்.












Click it and Unblock the Notifications