கத்திமுனையில் மிரட்டல்.. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்.. சென்னை நகைக் கடையில் திக் திக் சம்பவம்
சென்னை: சென்னை, ஆவடி அருகே நடைக் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி உரிமையாளரைத் தாக்கிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை, ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் எல்லைக்கு உட்பட்ட பிருந்தாவனம் அவென்யூ செந்தில் நகர் பகுதியில் ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நகை விற்பனை மற்றும் அடகு வியாபாரம் செய்து வரப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கடைக்குள் மர்மகும்பல் நேற்று புகுந்துள்ளது. கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் கத்திமுனையில் நகைகளைக் கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். ரமேஷ்குமார் நகைகளைத் தர மறுத்துள்ளார். இதையடுத்து, மர்ம கும்பல் அவரைக் கத்தியால் தாக்கிவிட்டு கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது
இதுகுறித்து தகவலறிந்த திருமுல்லையார் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கத்தியால் தாக்கியதில் காயமடைந்த ரமேஷ் குமாரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
ரமேஷின் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கடை உரிமையாளரே நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் ஆவடி நகைக் கடையில் துப்பாக்கி முனையில் வடமாநிலத்தவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்துக்கது. ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை வைத்து நடத்தி வந்தார். காரில் வந்த ஒரு கும்பல் வாடிக்கையாளர்கள் போல் கடைக்குள் சென்று, திடீரென துப்பாக்கிமுனையில் பிரகாஷை மிரட்டி அவரை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கடையின் ஷட்டரையும் அந்தக் கும்பல் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
கடை மூடியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் சந்தேகத்தின்பேரில் கடையைத் திறந்து பார்த்தபோது பிரகாஷ் கட்டிப்போடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் கொள்ளை நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளை கும்பல் காரில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications