அறநிலையத்துறைக்கு 708 கோடி ரூபாய்.. பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு என ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இதில், அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு, 250 திருக்குளம் சீரமைப்பு மற்றும் 75 தேர்கள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைக்கப்படும் எனவும் இதற்காக ரூ.418 கோடி ஒதுக்கியும் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் மரிய வில்சன் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கான அறிவிப்பில் மரிய வில்சன் கூறியதாவது:-

"அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு, 250 திருக்குளம் சீரமைப்பு மற்றும் 75 தேர்கள் சீரமைக்கப்படும். 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைக்கப்படுகின்றன. 418 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குடிநீர், கழிவறைகள், குளியறலைகள்..
ஒட்டு மொத்தமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு 708 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.
இது தொடர்பாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது:- தவெக அரசு எதிர்வரும் 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்து திருக்குடமுழுக்கு நடத்திடவும், 250 திருக்குளங்களை செப்பனிடவும், 75 மரத்தேர்களை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரியும் திருக்கோயில்களில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், குளியறலைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் திட்டமிட்டுள்ளது.
அறங்காவலர்கள் நியமனம்
திருக்கோயில்களில் நிர்வாக அறங்காவலர்களின் நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த அரசு பொறுப்பேற்ற உடன் மிக குறுகிய காலத்தில் விரைவாக 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் அறிவிப்பு வெளியிட்டு, அறங்காவலர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 418 கோடி ரூபாய் அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இத்துறையில் பல்வேறு கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வரும் இந்த அரசானது, திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாப்பதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்த திருத்த வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 708 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
