ரூ.1000 இனி கிடைக்காதா? மகளிர் உரிமைத்திட்ட பணிகள் புறக்கணிப்பு..வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அதிரடி
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் இன்று 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணித்து போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்... இந்த மகளிர் உரிமைத்தொகை பலருக்கும் வழங்கப்பட்டு வரும்நிலையில், கடந்த வாரம் இன்னொரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதில், உரிமை தொகை குறித்து அடிக்கடி மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும், மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி அதில் பணவசதி கொண்டவர்கள் யாராவது உரிமை தொகை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புறக்கணிப்பு: இதனிடையே, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) அக்டோபர் 26ம் தேதி முதல் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் எம்.பி. முருகையன் உறுதி செய்திருந்தார்.
பிரபல ஆங்கில சேனலுக்கு தந்த பேட்டியில், "இந்த திட்டத்திற்காகச் சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ள ஏஐஎஸ் சிறப்பு அதிகாரி செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
சிறப்பு அதிகாரி: இந்த திட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து பேச போனால், சிறப்பு அதிகாரி ஆர்வம் காட்டுவதில்லை.. ஊழியர்கள் சொல்லும் பிரச்சனையைக் கேட்காமல் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மட்டும் தருகிறார். அவரது போக்கும் நடத்தையும் ஊழியர்களுக்கு விரோதமாக இருக்கிறது. இதுவே உரிமைத்தொகை பணிகளைப் புறக்கணிக்க முக்கியக் காரணமாகும்" என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே தாலுகா அளவில் சில இடங்களில் ஆள்பற்றாக்குறை இருக்கிறது. இது அரசுக்கும் நன்கு தெரியும். எனவே, இத்திட்டத்திற்குக் கூடுதல் அதிகாரிகள் நிச்சயம் தேவைப்படும். அப்படியிருக்கும் போது வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டம்: எனவே, இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அக்டோபர் 26ம் தேதி மாலை 4.45 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள், அப்படியும் பிரச்சனை தீர்க்கப்படவில்லையானால், நவம்பர் 21ம் தேதி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.
சிக்கல்: அந்தவகையில், மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று மாலை 4.45 மணிக்கு அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து. மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உரிமை தொகை தொடர்பான அனைத்து பணிகளையும் புறக்கணித்தால், அது உரிமை தொகை மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கலை தந்துவிடும் என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தின் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications