இந்துசமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு! ஆணைகளை வழங்கிய முதல்வர்!
சென்னை: இந்துசமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆணைகளை இன்று நேரில் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வழக்கமாக திங்கள் டூ வெள்ளி வரை தான் இது போன்ற நிகழ்ச்சிகள் தலைமைச் செயலகத்தில் நடைபெறும். சனிக்கிழமைகளில் பெரும்பாலும் ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட சில அலுவல் சார்ந்த பணிகளை மட்டுமே முதலமைச்சர் கவனிப்பார்.
இருப்பினும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சனிக்கிழமையான இன்றும் ஆணைகளை வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் முதல்வர்.

முதலமைச்சர் ஸ்டாலின்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்றுஆணைகளை வழங்கினார்.

கோயில்களுக்கு குடமுழுக்கு
திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி
இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும். இதனிடையே முதலமைச்சரை சந்தித்த திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications