ஆந்திரா ₹16–₹20, தமிழ்நாடு ₹37/யூனிட்.. மின்வாரியம் செய்ய தவறிய ஒரு விஷயம்.. விலை அதிகமானது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் மின்சாரத் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைச் சமாளிக்க, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலையான யூனிட் ஒன்றுக்கு ₹37 என்ற விகிதத்தில் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன், 2022-ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ₹24 என்பதே இந்த நிறுவனம் செலுத்திய அதிகபட்ச விலையாக இருந்தது. தமிழ்நாடு 37 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கும் இதே காலக்கட்டத்தில், ஆந்திர பிரதேசம் 16 ரூபாய் முதல் 20 ரூபாய் என்கிற விகிதத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பது தான் பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு அரசின் மின் விநியோக நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் , அக்டோபர் 12 முதல் 31 வரை 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்காக, யூனிட் ஒன்றுக்கு ₹31.99 முதல் ₹34.49 வரையிலான விலையில் 1,500 மெகாவாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஏற்படும் மின்சாரத் தேவை அதிகரிப்பைச் சமாளிக்க வாங்கப்படவுள்ள 2,000 மெகாவாட் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு ₹33.37 முதல் ₹37 வரை செலவாகும்.

Same Period Different Prices AP at 16 20 TN at 37 Unit Why is the price high for TNPDCL

அசத்திய ஆந்திரா

மத்திய மின் அமைச்சகத்தின் மின்-ஏல இணையதளமான 'DEEP' மூலம் இவ்வளவு அதிக விலையில் வேறு எந்த மாநிலமும் ஒப்பந்தம் செய்யவில்லை; பல அரசு மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்கள் இதற்கான டெண்டர்களை வெளியிட்டிருந்தாலும், ஒப்பந்தங்களை இறுதி செய்யவே இல்லை. ஆந்திரப் பிரதேச மின் ஒருங்கிணைப்புக் குழு மட்டுமே இதே காலக்கட்டத்திற்கு 16 முதல் 20 ரூபாய் வரையிலான விலையில் 150 மெகாவாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்திருக்கிறது.

தாமதம் ஏன்

அரசு ஏன் இவ்வளவு தாமதம் செய்தது என்ற கேள்விகளுக்கு சில பதில்களும் உள்ளன. அரசு தாமதமாககொள்முதல் செய்ய முடிவு செய்ததற்கு காரணம், பொதுவாக அக்டோபர் மாதங்களில் கோடைக்காலத்திற்கு நிகரான மின்சாரத்தேவை தமிழ்நாட்டில் இருக்காது.. ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக அக்டோபர் 13ம் தேதியான இன்று வரையிலுமே கோடைக்காலம் போல் இருக்கிறது. வரும் அக்டோபர் 15ம் தேதி தான் எல் நினோவினால் ஏற்பட்ட வெயிலின் தாக்கம் மறைய போகிறது. அதன்பிறகே மழை பொழியும். மின்சாரத்தின் தேவை குறையும் என்கிற நிலை இருக்கிறது. எனினும் போதிய மழை முதல் சுற்றிலேயே பெய்யுமா, காலநிலை முற்றிலும் மாறுமா என்ற சந்தேகம் அரசுக்கே இருக்கிறது.

மின்சாரத் தேவை குறையவில்லை

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், அக்டோபர் 10-க்குப் பிறகு மின்சாரத் தேவை குறையும் என்று கருதப்பட்டது. ஆனால் தேவை குறையவில்லை.. இதனால் அவசரத்திற்காக மிகக் குறுகிய கால அவகாசத்தில் டெண்டர்களை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்த வானிலை முன்னறிவிப்பு தெளிவாக இல்லை. வரும் நாட்களிலும் இந்த வழக்கத்திற்கு மாறான மின் தேவை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; அதனால்தான் குறுகிய கால டெண்டர்களை வெளியிட்டோம் என்றார்.

4000 மெகாவாட் மின்சாரம்

அதேபோல் அக்டோபர் மாதத்தில் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியிருக்கிறது. மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் கட்டாய வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக் குறைவு ஆகியவற்றால் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டதால், தமிழக அரசால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான மின்சாரம் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாக மின்சார வாரியம் கூறுகிறது.

கடந்த ஆண்டு நிலவரம் என்ன

கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சபட்ச மின் தேவை சுமார் 17,000 மெகாவாட்டாகவும், ஒட்டுமொத்த தினசரி நுகர்வு சுமார் 365 மில்லியன் யூனிட்டுகளாகவும் (MU) இருந்தன. ஆனால் தற்போது உச்சபட்ச தேவை 20,000 மெகாவாட்டைத் தொட்டுள்ளதுடன், தினசரி நுகர்வும் கடந்த ஆண்டை விட சுமார் 70 மில்லியன் யூனிட்டுகள் அதிகமாக இருப்பது தான் அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க காரணம் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

37 ரூபாய்க்கு வாங்குவது ஏன்

எனினும் 35 முதல் 37 ரூபாய் என்பது மிக அதிகமான கட்டணமாக இருக்கிறதே என்கிற கேள்விக்கு, ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களும் வழக்கமான நிலக்கரி மின் நிலையங்களுக்குப் பதிலாக எரிவாயு அடிப்படையிலான மின் நிலையங்களாக இருப்பதால் தான், அதிக செலவு ஏற்படும் . அதனால் மின்சார ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதிருந்தது. சந்தையில் நிலக்கரி மின்சாரம் கிடைப்பதில்லை.


என்ன சாதகம்

ஆனால் இதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால், ஒப்பந்தம் செய்யப்பட்ட மொத்த மின் அளவுக்கும் பணம் செலுத்த வேண்டியது கிடையாது. கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும். நிலையான கட்டணம் ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது; எனவே தேவை குறைந்து, எரிவாயு அடிப்படையிலான மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் தேவைப்படாத சூழல் ஏற்பட்டால், நாங்கள் நிலையான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்களில் இந்தக் கட்டமைப்புச் செலவு மிக அதிகமாக இருக்கும்," இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தெளிவாக சொல்வது என்றால், இது தற்காலிகமாக குறுகிய கால ஏற்படாகவே 37 ரூபாய்க்கு மின்வாரியம் வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தேவை குறைந்து, மழை பெய்து நிலைமை மாறினால், பணம் செலுத்த தேவையில்லை. வாங்கவும் தேவையில்லை. எனவே தான் இந்த முடிவினை எடுத்திருப்பதாக அரசு தரப்பு விளக்கம் அளிக்கிறது.

நெட்டிசன் விமர்சனம்

இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஒரே காலகட்டம், வெவ்வேறு விலைகள்: ஆந்திரா ₹16-₹20, தமிழ்நாடு ₹37/யூனிட்

மின்சார விநியோகம் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளியை ஈடுசெய்ய, தமிழ்நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி வருகிறது.

24 மணி நேரமும் கிடைக்கும் 1,500 மெகாவாட் மின்சாரத்திற்கு ₹31.99-₹34.49/யூனிட்
மாலை நேர உச்சக்கட்டத் தேவையின்போது (peak hours) தேவைப்படும் 2,000 மெகாவாட்டிற்கு ₹33.37-₹37/யூனிட்
திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை
உச்சக்கட்டத் தேவை 20,000 மெகாவாட்டை எட்டியுள்ளது; தினசரி மின் நுகர்வு கடந்த அக்டோபர் மாதத்தை விட சுமார் 70 மில்லியன் யூனிட் (MU) அதிகமாக உள்ளது.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து அதற்கேற்பத் தயாராகத் தவறியதே ஆகும்.

ஆந்திரப் பிரதேசம் இதே காலகட்டத்திற்கான டெண்டர்களை செப்டம்பர் 9-ஆம் தேதியே இறுதி செய்தது; ஆனால், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (TNPDCL) மின்சாரம் தேவைப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் டெண்டர்களை வெளியிட்டது. கொள்முதல் நேரம் மற்றும் விதிமுறைகள் மாறுபட்டிருந்தாலும், ஆந்திரா ₹16-₹20/யூனிட் விலையில் மின்சாரத்தைப் பெற்ற நிலையில், தமிழ்நாடு ₹37/யூனிட் என்ற சாதனை விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள், குறைந்த காற்றாலை மின் உற்பத்தி மற்றும் பருவமழை தொடங்குவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்தப் பற்றாக்குறைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இவை முன்கூட்டியே திட்டமிடல் மூலம் கையாளக்கூடிய அல்லது கணிக்கக்கூடிய இடர்பாடுகளே ஆகும்.

ஆந்திரப் பிரதேசத்தைப் போல முன்கூட்டியே டெண்டர்களை வெளியிடுவதற்குப் பதிலாக, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் ஏன் கடைசி நிமிடம் வரை காத்திருந்தது? முறையற்ற திட்டமிடலால், மிக அதிக விலையில் மின்சாரத்தை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் மாநிலத்திற்கு ஏற்படுகிறது; இது இறுதியில் மின் விநியோக நிறுவனத்தின் மீதான நிதிச் சுமையை அதிகரிக்கிறது.

அவசரக்காலக் கொள்முதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், போதிய தயாரிப்பு இல்லாததால் சாதனை விலையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவது முற்றிலும் மாறுபட்ட விஷயமாகும்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+